top of page
Search

நாணென்னும் நல்லாள் ... 924

22/06/2022 (481)

“ஒவ்வொரு ஆணிடமும் பெண்மையின் பகுதி உண்டு. பெண்ணிடமும் ஆணின் பகுதி உண்டு. … முழுமையாக ஆண்தன்மையோ, பெண்தன்மையோ இருந்தால் அது முற்றுப் பெறாது.” --- பகவான் ரஜனீஷ்


கள்ளுண்டு களிப்பவர்களை எல்லோரும் தள்ளிவைப்பர், சான்றோர்கள் கைவிட்டுவிடுவர், ஈன்றாளும் முகம் சுளிப்பாள் என்றெல்லாம் சொல்லிவந்த நம் பேராசான் மேலும் ஒரு கருத்தை முன் வைக்கிறார்.


உன்னிடம்(ஆணிடம்) இருக்கும் மென்மையான பெண் பகுதி விலகிவிடும் என்கிறார்.


‘நாணம்’ என்றால் வெட்கம், கூச்சம், பணிவு என்று பொருள். இது ஏதோ, பெண்களுக்கு மட்டுமானது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது இரு பாலாருக்கும் பொதுவானதுதான். பெரும்பான்மைக் குறித்து பெண்ணுக்கு ஏற்றிச் சொல்லப்படுகிறது.


இக்காலத்தில், ‘வெட்கம் கெட்டதுகள்’ என்றால் இருபாலாரையும் குறிக்கும். செய்யும் செயலின் தரம் அறியாமல், எந்த உணர்வும் இல்லாமல் இருப்பவர்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். கள்ளுண்டால் நிச்சயம் ‘வெட்கம் கெட்டதுகள்’ ஆக நேரம் எடுக்காது.


நாணென்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.” --- குறள் 924; அதிகாரம் – கள்ளுண்ணாமை


கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு = எல்லோராலும் இகழப்படுகின்ற போதைப் பழக்கம் கொண்டுள்ளவர்களுக்கு; நாண் என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் = தவறுகளுக்கு வெட்கித்தலைகுனிதல், கூசுதல் என்னும் நல்ல பண்புகள் விலகிவிடும்.


அதாவது, வெட்கம் கெட்டதுகளாகி விடுவீர்கள்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




11 views5 comments
Post: Blog2_Post
bottom of page