07/08/2023 (886)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பேதைமை அதிகாரத்தின் முதல் இரண்டு பாடல்களின் மூலம் பேதைமையை வரையறுத்தார். அடுத்து வரும் இரு பாடல்கள் மூலம் அவர்கள் பொதுவாக எப்படிச் செயல்படுவார்கள் என்பதைத் தெரிவிக்கிறார். அந்த இரு குறள்களையும் நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 30/07/2022 (519), 07/11/2021 (257). மீள்பார்வைக்காக:
“நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.” --- குறள் 833; அதிகாரம் - பேதைமை
பழிக்கு அஞ்சாமை, நல்லவற்றை நாடாமல் இருப்பது, யாரிடமும் அன்பு பாராட்டாமை (நாரின்மை), மேலும் எந்த நல்ல பழக்க வழக்கங்களைப் பேணாமை இதெல்லாம் யார் செய்வார்கள் என்றால் பேதைகள்தான் செய்வார்கள் என்கிறார்.
“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்.” --- குறள் 834; அதிகாரம் – பேதமை
நன்றாக கற்று உணர்ந்தும், பிறர்க்கு அதனை எடுத்தும் சொல்பவர்கள், தான் அந்த அறிவால் பயன் பெறவில்லை என்றால் அவர்களைவிட முட்டாள்கள் இல்லை என்கிறார் நம் பேராசான்.
இதனைத் தொடர்ந்து இந்தப் பேதைமையால் என்ன நடக்கும் என்று எச்சரிக்கிறார். அந்தப் பாடலையும் நாம் பார்த்துள்ளோம். காண்க 13/11/2021 (263). மீள்பார்வைக்காக:
“ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.” --- குறள் – 835; அதிகாரம் – பேதைமை
வரப்போகும் ஏழு தலைமுறையையும் துன்பத்தில் வீழ்த்தி அழுந்தும் நிலையை தன் ஒரு செயலிலே செய்யும் ஆற்றல் படைத்தவர்தான் பேதை.
அது என்ன ஏழு? எப்ப பார்த்தாலும் ஏழு தலைமுறை என்கிறார்கள்? அதில் என்ன சிறப்பு? பாருங்க இன்றைக்கும் ஏழாம் தேதியாக இருக்கு!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Σχόλια