25/06/2024 (1207)
அன்பிற்கினியவர்களுக்கு:
இன்று அவள் மிக அழகாகவே தோன்றினாள். அந்த உடையும் மிக பொறுத்தமானதாக இருந்தது.
நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்றேன்.
யாரைவிட என்றாள்?
காதலித்தால் அனுபவிக்க வேண்டியதுதான்! இந்தச் சிறு சிறு ஊடல்கள் இல்லையென்றால் வாழ்க்கை இரசிக்கும்படியாகவா இருக்கும்?
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்து நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று. – 1320; - புலவி நுணுக்கம்
நினைத்திருந்து நோக்கினும் காயும் = அவளின் அழகை இரசித்துப் பார்த்தாலும் ஊடுவாள்; அனைத்து நீர் யார் உள்ளி நோக்கினீர் என்று = இந்தப் பார்வையெல்லாம் மனதுக்குள் நீர் யாரையோ எண்ணிக் கொண்டு என்னைப் பார்த்து நான் அழகி என்று என்னை ஏமாற்றுகிறீர் என்பாள்.
அவளின் அழகை இரசித்துப் பார்த்தாலும் ஊடுவாள். இந்தப் பார்வையெல்லாம் மனதுக்குள் நீர் யாரையோ எண்ணிக் கொண்டு என்னைப் பார்த்து நான் அழகி என்று என்னை ஏமாற்றுகிறீர் என்பாள்.
உண்மையிலேயே நீ அவளை விட அழகு என்று இவளிடம் சொல்லவா முடியும். அது எப்படி உங்களுக்குத் தெரியும் என்பாள்!
பெண்களின் கேள்விகளுக்கான பதில்களை அவர்கள் எப்பொழுதும் அறிந்தேதான் வைத்திருப்பார்கள். ஆடவரைப் பார்த்துக் கேட்பது அவர்களுக்கு விடை தெரியாமல் அல்ல.
ஏதோ, பதில் தெரியாமல் இவனைக் கேட்டுவிட்டாள் என்று எண்ணிக் கொண்டு இவன் பேச முற்படும்போதுதான் அகப்பட்டுக் கொள்வான்.
மௌனேன கலகோ நாஸ்தி – அதாங்க, கம்மென்று இருந்தால் கலகம் இல்லை. காண்க - 24/03/2021.
திருக்குறளின் இறுதி அதிகாரமான ஊடல் உவகைக்குள் நுழைகிறோம்.
முதல் அதிகாரமான வாழ்த்திலே தொடங்கிய திருக்குறள் உவகையில் முடிவடைவது இனிமைதானே!
அவளுக்குப் போதும் இந்த ஊடல் விளையாட்டு என்று தோன்றுகிறது. ச்சே, என்ன இது நேரத்தை வீண் செய்து கொண்டு … என்கிறாள்.
அவர் மேல் எந்தத் தவறும் இல்லை என்பது எனக்கும் தெரியும்.
சீண்டிப்பார்த்தால்தானே சிரிப்புக்கும் இடம் இருக்கும்.
இந்த ஊடலினால் என் மேல் அவர் கொண்டுள்ள அன்பின் மிகுதி தெள்ளத் தெளிவாகிறது. இது பேருவகையை எனக்களிக்கிறது.
இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு. – 1321; - ஊடல் உவகை
அவர்க்குத் தவறு இல்லை = அவர் மேல் எந்தத் தவறும் இல்லை என்பது எனக்கும் தெரியும்; ஆயினும் ஊடுதல் வல்லது = ஆயினும், ஊடுதலால் பயன் உண்டு; அவர் அளிக்கும் ஆறு = அது என்னவென்றால், அதுதான் அன்பின் மிகுதியால் எனக்கு அவர் அளிக்கும் ஆறுதல் வார்த்தைகள். அது எங்களின் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.
அவர் மேல் எந்தத் தவறும் இல்லை என்பது எனக்கும் தெரியும். ஆயினும், ஊடுதலால் பயன் உண்டு. அது என்னவென்றால், அதுதான் அன்பின் மிகுதியால் எனக்கு அவர் அளிக்கும் ஆறுதல் வார்த்தைகள். அது எங்களின் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.
அளி என்றால் அன்பு, அருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம் என்றெல்லாம் பொருள்படும். நல்லளி என்றால் உயரிய அன்பு என்று பொருள்படும்.
ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். – 1322; - ஊடல் உவகை
பாடு = பெருமை, மகிழ்ச்சி; துனி = துன்பம்;
ஊடலில் தோன்றும் சிறுதுனி = ஊடல் செய்யும் பொழுது மனத்திற்கு சிறு துன்பம் இருக்கத்தான் செய்யும்; நல் அளி வாடினும் பாடு பெறும் = அஃது, அந்த இருவரிடையே இருக்கும் உயரிய அன்பினையும் சற்று வாட்டமுறச் செய்யும். இருப்பினும் இறுதியில் மகிழ்ச்சியைத் தரும்.
ஊடல் செய்யும் பொழுது மனத்திற்கு சிறு துன்பம் இருக்கத்தான் செய்யும். அஃது, அந்த இருவரிடையே இருக்கும் உயரிய அன்பினையும் சற்று வாட்டமுறச் செய்யும். இருப்பினும் இறுதியில் மகிழ்ச்சியைத் தரும்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments