top of page
Search

நெருப்பினுள் துஞ்சலும் ... குறள் 1049

01/02/2022 (341)

நெருநல், நென்னல் என்றால் நேற்று என்று பொருள்படும் என்று நேற்றே பார்த்தோம்!


ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவையிலும் ‘நென்னல்’ என்ற சொல்லாட்சியைக் காணலாம்.


“… மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில் எழப்பாடுவான் …” என்கிறார்.


தூங்குவது என்பதற்கு ‘துஞ்சல்’ (துஞ்சு + அல்) என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சும்மா கண்ணை மூடிக்கொண்டிருப்பதற்கு ‘கண்பாடு’ என்கிறார்கள். கண்பாடு என்றால் கண்ணின் இமை பொருந்தியிருத்தல்.


Contronym என்றால் முரண்பட்ட பொருளைத்தரும் சொல். ‘நிரப்பு’ என்ற சொல் நிறைவையும் குறிக்கும், குறைவையும் குறிக்கும். நிரப்பு என்றால் சமதளம் என்றும் பொருள். உதாரணம்: “நெல் வைத்து நிரப்பிய நாழி” நெல்லைப் பரப்பி அதன் மேல் நாழியை வைத்தல் என்று பொருள்.


ஆனால்,வள்ளுவப் பெருமான் இங்கே ஆகக் கொடுமையான வறுமையை, பசிப்பிணியை குறிக்க நிரப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

சரி, இது நிற்க. நாம குறளுக்கு வருவோம்.


அதாவது, சில மாயா ஜாலம், சித்து வேலைகள் செய்து சிலர் நெருப்புக்குள்ளேயும்கூட தூங்கிடலாமாம். ஆனால், வறுமை, உண்ணுவதற்கு எதுவுமில்லாமல் வரும் பசிப்பிணி வந்துவிட்டால் கண்ணைக்கூட மூடமுடியாத கொடுமை வந்துவிடுமாம். படம் பிடித்துக் காட்டுகிறார், நம் வள்ளுவப் பெருந்தகை.


நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.” --- குறள் 1049; அதிகாரம் – நல்குரவு


நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் = நெருப்புக்குள் சிலர் ஏதாவது செய்து தூங்கிவிடக்கூடும்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது = (ஆனால்) வறுமை வந்து விட்டால் எந்த வகையிலும் கண்ணை மூடக்கூட முடியாது.


முடிந்தவரை வறுமையின் கொடுமைகளை நான்கு பாட்டால் சொல்லிவிட்டார். அடுத்து, முடிவுரையாக ஒரு குறள். ஒரு பெரிய கேள்வியைக் கேட்டு அதற்கு பதிலாக ஒரு பரபரப்பான கருத்தைச் சொல்லப் போகிறார். எல்லாம் சொல்லிட்டேன், நீ அப்படித்தான் இருக்கப் போகிறாய் என்றால் …


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




16 views2 comments
Post: Blog2_Post
bottom of page