15/06/2022 (474)
‘அன்பின் விழையார்’, ‘பண்பில் மகளிர்’, ‘பொருட் பெண்டிர்’, ‘பொருட்பொருளார்’, ‘பொதுநலத்தார்’, ‘தகைசெருக்கிப் பாரிப்பார்’ இவைகளைத் தொடர்ந்து ‘நெஞ்சில் பிற பேணிப் புணர்பவர்’ என்று பயன்படுத்துகிறார்.
நெஞ்சம் என்றாலே அதில் ஈரம் நிறைந்து இருக்க வேண்டும், அன்பு இருக்க வேண்டும், கருணை இருக்க வேண்டும், மற்றவர்களுக்காக அது இரங்க வேண்டும். இதுதான் முக்கியம். இப்படிப் பட்ட நெஞ்சம்தான் ‘நிறை நெஞ்சம்’.
அவ்வாறு இல்லாமல் நெஞ்சத்தில் ‘பிற’ புகுந்து கொண்டால்? நெஞ்சம் நஞ்சாகும். பிற என்பது கள்ளம், கபடம், வஞ்சம், வன்மம் …
அவர்களைத்தான் ‘நெஞ்சில் பிற பேணுபவர்கள்’ என்கிறார் நம் பேராசான்.
வரைவின் மகளிரின் நெஞ்சில் அன்பு இருக்க வழியில்லை. அன்பு கிடைக்காததால்தான் அவர்கள் அவ்வழி சென்றார்களா? எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கும். இது நிற்க.
ஏதோ ஒரு காரணத்தால் பாலிலே நஞ்சு கலந்துவிட்டது. நெஞ்சத்தில் நஞ்சு புகுந்துவிட்டது. கள்ளம், கபடத்தால்தான் காலத்தைக் கடத்தமுடியும் என்று முடிவெடுத்துவிட்டார்கள். அதிலே அவர்கள் பயணித்தும்விட்டார்கள். அதுவே, பழக்கமாகி, வழக்கமாகவும் ஆகிவிட்டது.
அவ்வாறு இருப்பவர்களிடம் சில்லறையைச் சிதறவிட்டு சிற்றின்பம் காணலாம் என்பவர்களை என்ன சொல்ல? என்று கேட்டு, உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நீங்களும் அதேபோல்தான் என்று சொல்வதைப் போல் அமைந்துள்ளது இந்தக் குறள்.
“நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள்.” --- குறள் 917; அதிகாரம் – வரைவில் மகளிர்
நெஞ்சில் பிற பேணிப் புணர்பவர் தோள் தோய்வர் = நெஞ்சத்தில் அன்பில்லாமல் பிறவற்றைச் சுமந்து கொண்டு இருப்பவர்களின் தோள்களில் சாய்ந்து இன்பம் காண்பவர்கள் (யாராக இருக்கும்?);
நிறை நெஞ்சம் இல்லவர் = நெஞ்சத்தில் அன்பு இல்லாதவர்கள், கடமையை மறந்தவர்கள், ஆணவம் மற்றும் செல்வச் செருக்கு கொண்டவர்கள்தான் அவ்வாறு இன்பம் காண முயல்வர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Kommentare