top of page
Search

நிறையரியர் ... 1138

10/10/2022 (588)

அந்தக் காம நோய் இருக்கிறதே அது படாத பாடு படுத்துகிறது. அதற்குத்தான் வெட்கமில்லை, நாணமில்லை!


அவர் என்னமோ மிடுக்கானவர்தான்! அவர் எப்படியோ காம நோய்க்கு ஆட்பட்டுவிட்டார் என்று சற்றும் மனம் இரங்காமல் அந்தக் காம நோய் இருக்கிறதே அது கொஞ்சம்கூட மனம் இரங்காமல் அவர் ஒளித்துவைத்திருக்கும் அன்பினை ஊர் அறிய வெளிப்படுத்த மடலூர்தலை அவனுக்கு போதிக்கிறது.


நாணம் அவருக்கு இருக்கிறதாம். ஆனால், அந்தக் காம நோய்க்குத் தான் சற்றும் வெட்கம் இல்லையாம்! கொஞ்சம்கூட இரக்கமும் இல்லையாம்! அதனால்தான் அவனைக் கண்டு ஊர் நகைக்குமாறு அது வெளிப்படுத்த முயல்கிறதாம்!


‘அளி’(பெயர்ச்சொல்) என்றால் இரக்கம், பரிவு என்று பொருள். ‘அளி’(வினைச்சொல்) என்றால் கொடு என்று பொருள்.


‘அளியர்’ என்றால் இரங்கத்தக்கவர்.

‘அரியர்’ என்றால் மேன்மையானவர், வலியவர்.


நாம் இதுவரை அவன் தான் நாணத்தை துறக்கப் போகிறான் என்று நினைத்திருந்தோம். நம் பேராசான் வண்டியை வேறு பக்கம் திருப்பி “தம்பி அவன் மேல் தப்பு இல்லை, இது எல்லாம் அந்தக் காம நோய் படுத்தும் பாடு. நாணத்தை துறந்தது அந்தக் காதல்தான். அந்தக் காதலுக்குத்தான் வெட்கமில்லை” என்கிறார்.


நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறைஇறந்து மன்று படும்.” --- குறள் 1138; அதிகாரம் – நாணுத் துறவு உரைத்தல்


நல்ல குணங்கள் அனைத்தும் கொண்ட அரியவர், மேலும் பரிவு காட்டப்பட வேண்டியவர், என்று எண்ணாமல் அந்த வெட்கம் கெட்ட காம நோய் அவன் ஒளித்து வைத்திருக்கும் அன்பினை ஊர் எள்ளி நகையாடுமாறு வெளிப்படுத்திக் கொள்ள முயல்கிறது.


நிறையரியர் = நல்ல குணங்கள் அனைத்தும் கொண்ட அரியவர்; மன் அளியர் = மேலும் பரிவு காட்டப்பட வேண்டியவர்; என்னாது = என்று எண்ணாமல்; காமம் மறை இறந்து மன்று படும்= (அந்த வெட்கம் கெட்ட காம நோய்) அவன் ஒளித்து வைத்திருக்கும் அன்பினை ஊர் எள்ளி நகையாடுமாறு வெளிப்படுத்திக்கொள்ள முயல்கிறது.


‘காரணமின்றி காரியமில்லை. காரணத்தைப் பாருங்க தம்பிங்களா’ என்கிறார். இது ஊருக்குச் சொன்னது. பார்த்து ஆக வேண்டியதை செய்யுங்க ப்ளீஸ் என்கிறார்.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்




 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page