நிலத்தியல்பான் நீர்திரிந்து ... குறள் 452
21/03/2022 (388)
நிலத்தில் விழும் நீர் அந்த நிலத்தின் வண்ணத்தையும் இயல்பையும் பெறும்.
குறுந்தொகையிலிருந்து ஒரு பாடல்:
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” --- பாடல் 40, செம்புலப் பெயல் நீரார்
என் தாயும் உன் தாயும் எப்படி சொந்தம்?
என் தந்தையும் நின் தந்தையும் எவ்வழிச் சுற்றம்?
நானும் நீயும் எப்படி இணைந்தோம்?
செம்மண்ணில் விழுந்த நீர் போல
நம் நெஞ்சங்கள் கலந்து விட்டன!
கம்பராமாயணத்தில், கும்பகர்ணன் தனது அண்ணன் இராவணனுக்குச் சொன்னது:
'புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்.” --- கம்பராமாயணம்
புலத்தியர் என்ற பெரியவரின் குற்றமற்ற மரபினில் வந்த நின் குலத்தின் இயல்பு அழிந்துவிட்டது; (அதனால்) உனது அரசு முற்றும் அழியுமோ? ; அதுவே உனது வெற்றியை அழிக்கும் காரணம்
குற்றமற்ற நிலத்தில் நீர் வீழ்ந்திடின் நீரின் தன்மை மாறுவதில்லை.
கம்பபெருமான் சொல்லாமல் சொன்னது: நிலம் கெட்டுவிட்டது. அதனால் அதில் எந்த நல்ல நீரினாலும் பயன் இல்லை என்பதாம். இது நிற்க.
நம் பேராசான், குறளில்:
நிலத்தின் இயல்பால் நீர் கெடும், அது போல மாந்தர்களுக்குத் தான் சென்று சேரும் சிற்றினத்தின் இயல்பால் அவர்களின் அறிவு தடைபடும் என்கிறார்.
“நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு.” --- குறள் 452; அதிகாரம் – சிற்றினஞ்ச் சேராமை
நிலத்தைப் பன்படுத்தினால் வளத்தைப் பெறலாம்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
