01/08/2022 (521)
“விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்காது” என்பது பழமொழி. அதாவது, என்ன விதை போட்டு இருக்காங்க என்பது அது முளைத்த உடனே கண்டுபிடிச்சிடலாம்.
கால் என்பதற்கு பல பொருள் இருக்காம், அதிலே, ஒன்று ‘முளை’
நிலத்தில் விதைத்ததை கால் காட்டுமாம்!
அதுபோல, ஒருத்தன் மனசிலே என்ன நினைச்சுட்டு இருக்கான் என்பதை அவனது சொல் காட்டும். அது, அந்நேரத்தில் நினைப்பதைக் காட்டிக் கொடுக்கும்.
ஒருத்தனுக்கு எப்போதுமே நிதானமாக பேசும் தன்மை இருந்தா அது, அவனது குலத்தைக் காட்டுமாம்.
“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.”--- குறள் 959; அதிகாரம் - குடிமை
நம்மாளு: அது என்ன ஐயா, வெறும் சொல்லை மட்டும் சொல்லியிருக்கார்? செயலைச் சொல்லலை?
ஆசிரியர்: முளை முளைத்த உடன் அதன் பயன் நமக்கு தெரியுது இல்லையா, அது போல, சொல் வெளிப்படுவதால் அதைத் தொடரும் செயலும் தெரிந்துவிடும்.
முளை வெளியே தெரிந்தால் உள்ளே என்ன விதை இருக்குன்னும் நமக்குத் தெரியும். அது போல, வெளியே வரும் சொல்லை வைத்து அவனின் உள்ளே இருக்கும் எண்ணமும் வெளிப்படும்.
நம்ம பேராசான் ரொம்ப கெட்டி. சொல் செட்டு உடையவர். அதான் முளை – சொல் என்று சொல்லி நிறுத்திட்டார். இன்னொன்று சொல்ல வேண்டுமென்றால் நிலத்தையும் குலத்தையும் ஓப்பிடுவது.
வெளியே வந்த முளையை வைத்து நிலத்தின் பாங்கையும் அறிந்து கொள்ளலாம். சொல்லைக் கொண்டு அவன் பயனிக்கும் குலத்தையும் அறிந்து கொள்ளலாம்.
நம்மாளு: சொல் செட்டுன்னா என்னங்க ஐயா?
ஆசிரியர்: சொற்களை ரொம்ப சிக்கனமாகப் பயன் படுத்துவது சொல் செட்டு.
நம்மாளு: அது சரி ஐயா? அது ஏன் காட்டும் காட்டும் என்று இருமுறை வருகிறது?
ஆசிரியர், அன்பாக ஒரு முறை முறைத்துவிட்டு அப்புறம் பார்க்கலாம் என்றார்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments