top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

நிலைமக்கள் சால ... 770

20/07/2023 (868)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:


வில்பிரெடோ பரேட்டோ (Vilfredo Pareto 1848 – 1923) – இவர் பிரான்ஸ் நாட்டில் தோன்றிய இத்தாலியர். இவரை எப்படிச் சொல்வது? இவர் ஒரு பல்துறை வல்லுநர். கட்டிடவியல் பொறியாளராகத் (Civil engineer) தொடங்கி பல பரிமானங்களை எடுத்தவர். இவர் ஒரு சமுகவியலாளர், பொருளாதார நிபுணர், அரசியல் அறிஞர், தத்துவ ஆசான் ... இப்படிப் பல பரப்புகளில் சிறந்து விளங்கியவர்.


இவர் சொன்ன 80/20 விதி இன்று அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அது என்ன 80/20 விதி என்பீர்களானால் ஒரு செயலுக்கு பல காரணிகள் இருக்கலாம். ஆனால், அந்தக் காரணிகளில் பெரும்பாலும் அதி முக்கியமானவை (vital) என்று 20 சதவீத காரணிகள்தாம் இருக்கும், மற்ற 80 சதவீத காரணிகள் துணைக் காரணிகளாக இருக்கும் என்றார்.


அவரின் தோட்டத்தில் விளைந்த கடலைகளை ஆராய்ந்தபோது 80% கடலைகள் 20% செடிகளில் இருந்ததைக் கண்டார். மேலும், அப்போது, இத்தாலி நாட்டில் 80% நிலம் 20% மக்களிடம் உள்ளதையும் கணக்கிட்டார். இப்படிப் பல ஆராய்ச்சிகளின் முடிவில் 80/20 விதியை உருவாக்கினார்.


நமக்கெல்லாம் தெரிந்த மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தில் 2003 இல் முதன்மை அலுவலர் (CEO) ஆக இருந்தவர் ஸ்டீவ் பால்மர். அப்போது அந்த நிறுவனத்தில் பல் வேறு மென்பொருள்கள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவர் கண்டறிந்தது என்னவென்றால் விண்டோஸ் மற்றும் ஆபீஸில் (Windows and Office) 80 சதவீத குறைபாடுகள் 20% சதவீத பிழைகளால் ஏற்படுகின்றன என்றார்.


எனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியிலும் இந்த விதியைத்தான் பயன்படுத்தி பட்டம் பெற்றேன். (வேறு எப்படித்தான் என் பெருமையைச் சொல்வது!)


தகவல் தொழில் நுட்பத் துறையில் பொதுவானப் பழமொழி என்னவென்றால் 80 சதவீத பயனர்கள் (end users) ஒரு மென்பொருள் பயன்பாட்டின் அம்சங்களில் 20 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகின்றனர். உண்மையும் இதுதான். நமது அலைபேசியில் நூற்றுக்கணகான பயன்பாடுகள் இருந்தாலும் நாம் பயன்படுத்துவது என்னமோ ஒன்று அல்லது இரண்டுதான்.


அண்மையில் வந்த செய்தி என்னவென்றால் 1% செல்வந்தர்கள் உலகத்தின் உள்ள 50% வளங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்களாம்!


இப்போது வில்பிரெடோ பரேட்டோ இருந்திருந்தால் அவர் அந்த விதியை 1/99 விதி என்று திருத்தியிருப்பார்!


சரி, இந்தக் கதை சுவாரசியமாக இருந்தாலும் இப்போது எதற்கு என்கிறீர்களா? இந்த விதியைக் குறிப்பால் காட்டியிருக்கிறார் நம் பேராசான்.


நம்மாளு: அப்படியா?

ஆசிரியர்: ஆமாம். நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால் பயன் தருபவர்கள் பலராக இருந்தாலும், தலைமைத் தாங்கி வெற்றியைப் பெற்றுத் தருபவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள் என்கிறார்.


நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.” --- குறள் 770; அதிகாரம் – படை மாட்சி


நிலைமக்கள் சால உடைத்தெனினும் = பயன் தரும், எதிர்த்துப் போராடும் வீரர்கள் பலர் இருந்தாலும்; தலைமக்கள் இல்வழி தானை இல் = அந்தப் படையைத் தலைமைத் தாங்கி வழி நடத்தும் சிலர் இல்லையாயின் அந்தப் படை வெற்றிப் படையாக அமையாது.


பயன் தரும், எதிர்த்துப் போராடும் வீரர்கள் பலர் இருந்தாலும், அந்தப் படையைத் தலைமை தாங்கி வழி நடத்தும் சிலர் இல்லையாயின் அந்தப் படை வெற்றிப் படையாக அமையாது.


Vital few; Trivial many என்பார்கள் ஆங்கிலத்தில். அதாவது முக்கியமானவை சில; முக்கியமற்றவை பல என்பார்கள்.


நம் பேராசன் சொல்வது என்னவென்றால் Vital few; Useful many! முக்கியமானவை சில; பயனுள்ளவை பல என்கிறார்.


நம் பேராசான் பேராசானே!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






2 Comments


Unknown member
Jul 20, 2023

very nicely explained 80/20 concept /principle taught in Management institutes.

Like
Replying to

Thanks sir

Like
bottom of page