15/01/2024 (1045)
அன்பிற்கினியவர்களுக்கு:
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள். இந்த பொங்கல் நன்னாளில் நம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
இந்த இனிய நாளில் கொல்லாமையைச் சிந்திப்பது சிறப்பே.
கொல்லாமையின் சிறப்பை மேலும் விரிக்கிறார். இந்தத் தீயச் செயலைச் செய்தால் இப்படி ஆகும்; அந்தப் பாவத்தைச் செய்தால் படுகுழிக்குப் போகணும் என்றெல்லாம் கருதி அத்தீயச் செயல்களைத் தவிர்ப்பது நன்றுதான். ஆனால், முதலில் அஞ்ச வேண்டியது கொலைப் பாவத்திற்குதான் என்று மீண்டும் சொல்கிறார். இது எல்லார்க்கும் பொதுவான ஒரு அறம்.
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. – 325; - கொல்லாமை
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் = இத் தீயச் செயல்களைச் செய்வதனால் தன் நிலை தலைகீழாக மாறிவிடும் என்று அஞ்சி அச்செயல்களைத் தவிர்த்தவர்களுள் எல்லாம்; கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை = கொலைப் பாவத்திற்கு அஞ்சி கொல்லாமையைக் கடைப்பிடிப்பவர்தான் முதன்மையானவர்.
இத் தீயச் செயல்களைச் செய்வதனால் தன் நிலை தலைகீழாக மாறிவிடும் என்று அஞ்சி அச்செயல்களைத் தவிர்த்தவர்களுள் எல்லாம், கொலைப் பாவத்திற்கு அஞ்சி கொல்லாமையைக் கடைப்பிடிப்பவர்தான் முதன்மையானவர்.
அஃதாவது, கொல்லாமையைக் கடைபிடித்தால் நிங்கள்தாம் “தல” (தலை)!
மணக்குடவப் பெருமான், பரிமேலழகப் பெருமான் போன்ற அறிஞர் பெருமக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் பிறப்பு என்றாலே அதில் இன்பம் ஒன்றும் இல்லை. எல்லாம் துன்பம்தான். எனவே அத்தகைய பிறப்பை மறுத்து பிறவாமை வேண்டும் என்று இல்லறத்தைத் துறந்தாருள் எல்லாம் கொல்லாமையை மறவாதவன் உயர்ந்தவன் என்கிறார்கள்.
பொங்கல் பொங்கட்டும்; மகிழ்ச்சி தங்கட்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments