top of page
Search

நிலையின் திரியா ... 124

05/10/2023 (943)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

இந்தப் பூமிப் பந்தின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு மலைகளால் சூழப்பட்டுள்ளன. உலகின் பெரும்பாலான ஆறுகள் மலைகளில் இருந்துதான் தோன்றுகின்றன.


ஆசியக் கண்டத்தில் பாதிக்கும் மேலான நிலப்பரப்பு மலைகளால் ஆனது. மிகவும் பிரமாண்டமான மலைத்தொடர்கள் ஆசியாவில் காணப்படுகின்றன. இமயமலைத்தொடரைக் கொண்ட ஆசியாவை சிகரங்களின் தாயகமாகச் சொல்லலாம்.


“உலகின் மேற்கூரை” என்று அழைக்கப்படுவது நமது ஆசியக் கண்டத்தில் உள்ள திபெத்திய பீட பூமி. கிட்டத்தட்ட 25,00,000 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. நமது தமிழ் நாட்டைப் போன்று 19 மடங்கு பெரியது. இலங்கையோடு ஒப்பிட்டால் 38 மடங்கு பெரியது.

கடல் மட்டத்திலிருந்து 13,000 – 15,000 அடி உயரத்தில் (4000 – 5000 மீட்டர்) அமைந்துள்ளது. வட தென் துருவங்களுக்கு அடுத்தபடியாக பனியால் முடப்பட்டு இருப்பதால், இதனை மூன்றாவது துருவம் என்றும் அழைக்கிறார்கள். ஆசியாவின் மிகப் பெரிய ஆறுகள் இதனின்று தோன்றி தண்ணிர் வளத்தை அளிக்கின்றன.


சரி, இந்த மலைகளின் புராணம் எதற்கு என்கீறீர்களா? இவ்வளவையும் செய்யும் மலைகள், தன்பாட்டில் அடங்கித்தான் இருக்கின்றன. அது தங்களின் நிலையில் இருந்து திரிவதில்லை.


இதைக் கவனித்த நம் பேராசான், “இது என்ன பிரமாதம்” இதை விடச் சிறப்பானவன் மனிதன் என்றார்!


நம்மாளு: ஐயா, என்ன நீங்க? ஒரு அளவு வேணாம்? ஒரே அடியாகத் தூக்கிவிடறீங்களே. இது உங்களுக்கே நியாயமாக இருக்கா?


வள்ளுவப் பெருந்தகை: தம்பி, இதுதான் உண்மை. மலை தன்மட்டில் இருந்து கொள்ளும். உணர்ச்சிகளுக்கு ஆட்படாது. ஆனால், இந்த மனிதன் இருக்கிறானே அவன் பெரும்பாலும் உணர்ச்சிப் பிழம்பு. உயர்வு வந்தால் தலை கால் தெரியாது ஓடுவான். தாழ்வு வந்தால் இருக்கும் இடமே தெரியாது. அவ்வாறில்லாமல், தன் நிலையால் திரியாமல் அடக்கத்தோடு இருக்கிறானே அவன் மலையினும் மாணப் பெரியவன்னு சொல்லலாமா?


நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.” --- குறள் 124; அதிகாரம் – அடக்கமுடைமை.


நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் = தன் நிலையிலிருந்து திரியாமல் அடக்கத்தோடு இருப்பவனைக் காணின்; மலையினும் மாணப் பெரிது = அவனின் தோற்றம் இந்த உலகில் நிலைத்து, உயர்ந்து, ஒங்கி நிற்கும் பெரும் மலைகளைவிட உயர்ந்துத் தோன்றுகிறது.


தன் நிலையிலிருந்து திரியாமல் அடக்கத்தோடு இருப்பவனைக் காணின் அவனின் தோற்றம் இந்த உலகில் நிலைத்து, உயர்ந்து, ஒங்கி நிற்கும் பெரும் மலைகளைவிட உயர்ந்துத் தோன்றுகிறது.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page