20/01/2024 (1050)
அன்பிற்கினியவர்களுக்கு:
இருபத்து ஐந்தாம் அதிகாரம் அருளுடைமையில் தொடங்கி முப்பத்து மூன்றாம் அதிகாரமான கொல்லாமை முடிய துறவறவியலில் விரதங்களைக் கூறினார்.
விரதங்களை ஒழுக ஞானம் தோன்றும். அதைக் குறித்து நான்கு அதிகாரங்களில் விளக்குகிறார். அவை யாவன: 34. நிலையாமை; 35. துறவு; 36. மெய்யுணர்தல்; 37. அவா அறுத்தல்.
சிம்மக் குரலெடுத்துப் பாடி நம் மனத்தில் என்றும் நிலைத்து நிற்கும் நம் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
… உளநாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி
உண்மைப் பொருளாக உந்தனையே நாடி
சிலநாள் வாழ்ந்தாலும் செம்மையையே தேடி
தென்தமிழே அன்பே நீயும் நானும் கூடி
மகிழ்ந்திட வரம் ஒன்று தா - மனம்
மகிழ்ந்திட வரம் ஒன்று தா...
“சில நாள் வாழ்ந்தாலும் செம்மையையே தேடி தென்தமிழே அன்பே நீயும் நானும் கூடி” … அடடா, அடடா அருமை. என்ன ஒரு வைர வரிகள்.
இருக்கும் வரையில் தமிழுடனும், அன்புடனும் கூடி மகிழ்ந்திட வரம் ஒன்றுதா என்று ஒரு கோரிக்கையை வைக்கிறார்.
… இளமை நில்லாது யாக்கை நிலையாது
வளமையோ செல்வமோ நலமொன்றும் தாராது
நிலைமை இதுவாகத் தலைமைப் பொருளாக
நிம்மதியை எந்தனுக்குத் தா ... முருகா ...
நிம்மதியை எந்தனுக்குத் தா ...
பழனி மலை முருகா, பழம் நீ திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்கு தா
ஞானப்பழம் ஒன்று எந்தனுக்குத் தா... முருகா ...
இந்தப் பாடலைக் கூர்ந்து கவனித்தால், நமக்குத் தெரியும் செய்திகள் பல.
வாழ்வு சில நாள்; இளமை நிலையாது; இந்த உடலுக்கு அழிவுண்டு; வளங்களும் செல்வங்களும் நாம் இந்த உலகைவிட்டு பிரியும்போது எடுத்துச் செல்ல முடியா!
இதுதான் நம் நிலைமை என்றால், உண்மையான பொருளான அமைதியை, அந்த ஞானத்தைத் தா என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்.
அந்த ஞானப் பழத்தைத்தான், நம் பேராசான் இனிவரும் குறள்களில் விளக்கப் போகிறார்.
துறவறவியலின் முக்கியமான பகுதி நிலையாமை. தோற்றம் என்ற ஒன்று இருந்தால் அழிவு என்ற ஒன்று இருக்கும். இது முதல் நிலை ஞானம்.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. – 331; - நிலையாமை
நில்லாதவற்றை நிலையின என்றுணரும் = ஆக்கிய பொருள்கள் நிலைத்து நிற்க இயலா. அறியாமையால், அவை எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டன என்று நினைந்துகொண்டு அவற்றின்மீது பற்றுச் செலுத்தி அதன்பின்னர் ஓடிக்கொண்டிருக்கும்; புல்லறிவு ஆண்மை கடை = தெளிவு இல்லா அறிவின் நெறி இழிவானது.
ஆக்கிய பொருள்கள் நிலைத்து நிற்க இயலா. அறியாமையால், அவை எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டன என்று நினைந்துகொண்டு அவற்றின்மீது பற்றுச் செலுத்தி அதன்பின்னர் ஓடிக்கொண்டிருக்கும் தெளிவு இல்லா அறிவின் நெறி இழிவானது.
மேலும் அடுத்து வரும் குறள்களில் நிலையாமையைக் குறித்து விரிக்கிறார். இது நிற்க.
பொருள்களின் மேல் பற்றுவைத்தால் அவை நம்மைவிட்டு நீங்கும்போது துன்பத்தைத் தரும். எனவே, நாமே அவற்றைவிட்டு நீங்கிவிட வேண்டும். இது இரண்டாம் நிலை ஞானம்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். – 341; - துறவு
என்றார். காண்க 28/02/2021.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Opmerkingen