பகவத்கீதையின் சாரம் என்ன?
16/07/2022 (505)
பிறப்பும், சாதியும் நம் கையில் இல்லை என்பதைக் கண்டோம். அதைக் கொண்டு பிறரைத் தாக்குவது, அவமதிப்பது சரியான செயல் அல்ல என்றார் ஆசிரியர்.
நம்மாளு: ஐயா, திருக்குறளை விட்டுட்டு எங்கேயோ போய் கொண்டிருக்கிறோமே?
ஆசிரியர்: காரணம் இருக்கிறது. போகப் போகப் புரியும். மேலும், இந்தக் கதைகளையும் தெரிந்து வைப்போமே.
ஆசிரியர் மேலும் தொடர்ந்தார். மகாபாரதம் எனும் இதிகாசம் ஐந்தாவது வேதம் என்று சொல்லப் படுகிறது. வேதங்களையும், ஆகமங்களையும் மற்றபிற அற நூல்களையும் மக்கள் வரும் காலத்தில் கருத்தூன்றி படிக்க நேரமும், வாய்ப்பும் இருக்காது என்று உணர்ந்த வியாச பகவான், அறக் கருத்துகளை சொல்ல எடுத்துக் கொண்ட முயற்சி தான் மகாபாரதம்.
மகாபாரதத்தில் முக்கியமான பகுதி எது என்று கேட்டால் பகவத்கீதை. பகவத்கீதை. 700 சுலோகங்களைக் கொண்டது என்கிறார்கள்.
பகவத் கீதை, கண்ண பெருமானால் அர்ச்சுனனுக்கு போர் களத்தில் அருளப் பட்டது.
எதற்காக?
எதற்காக என்றால், அருச்சுனன் போர் களத்தில் எதிரே இருப்பவர்களைக் கண்டு மயங்குகிறான். எதிரே, தன்னை மார் மேலும் தோள் மேலும் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்த பிதாமகர் பீஷ்மர், வில்லுக்கு விஜயன் என்று பெயர் வரக் காரணாமாயிருந்த குரு துரோணாசாரியார், கிருபாச்சாரியார், மற்றும் அங்கு இருப்பவர்கள் தன் சகோதரர்கள், உறவுகள்.
இவர்களையெல்லாம் கொன்று எந்த அரசை நாம் நிறுவப் போகிறோம் என்று மயங்குகிறான்.
வில்லை கீழே போடுகிறான். என்னால் இவர்களை கொல்ல முடியாது என்கிறான்.
கண்ண பரமாத்வாவுக்கு சற்றே ஆச்சரியம் கொண்ட வியப்பு. கிளம்பும் போது, அர்ச்சுனன் கண்ண பரமாத்விடம் சொல்லியிருந்தான். கண்ணா, நீ தேரை செலுத்து; சென்று களத்தின் நடுவில் நிறுத்து; நம்மை அவமதித்த, துரௌபதியின் ஆடையைக் களைந்த அந்த உலுத்தர்களுக்கு இன்றுதான் இறுதி நாள். போ கண்ணா, விரைவாகப் போ என்று ஆணையிட்டு இருந்தான்.
அந்த ஆணையை மறந்தான். பாச மயக்கம் ஆட்கொண்டது. வில்லினைக் கீழே போட்டு விட்டான்.
அப்போது உபதேசம் செய்ததுதான் பகவத் கீதை.
அதன் சாரம் என்ன?
கடமையையும், தர்மத்தையும் நிலை நாட்ட வேண்டிய இடத்தில் பாச மயக்கங்களுக்கு இடம் இல்லை என்பதுதான் பகவத் கீதையின் சாரம்.
கடமையைச் செய்; பலனைப் பாராதே!
சரி, அந்த மகாபாரதக் கதையில் கடைசி வரை பகவத் கீதையின் சாரத்தைக் கடை பிடித்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்று ஒரு கேள்வியோடு நிறுத்தினார் ஆசிரியர்.
நம்மாளு: “ங்கே” என்று விழிக்க…
நாளை தொடருவோம் என்று நடையைக் கட்டினார் ஆசிரியர்.
அந்தக் கேள்விக்கு பதில் உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
