top of page
Search

பகவத்கீதை 15/08/2024

Updated: Aug 16

15/08/2024

அன்பிற்கினியவர்களுக்கு:

கனிவு கைக்கூப்புதல்கள்.

திருக்குறளை ஒரு வாசிப்பு செய்தோம். அந்தப் பதிவுகள் www.easythirukkural.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

அடுத்து என்ன படிக்கலாம் என்ற கேள்விக்குப் பலவிதமான ஆலோசனைகள் வந்த வண்ணம் இருந்தன.


திருக்குறள் தொடரைத் தினமும் வாசித்துக் கருத்துகளைப் பகிரும் என் அருமை நண்பர் ஒருவர் அடிக்கடி பகவத்கீதையில் உள்ள கருத்துகளின் ஒற்றுமையைப் பதிவிடுவார். அதனால் எனக்கும் பகவத்கீதையின் மேல் ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது.


எனக்குச் சமஸ்கிருத மொழி தெரியாது. அதனால் பெரும் தயக்கம்.

பகவத்கீதையை ஒட்டியும் வெட்டியும் பல மொழிகளிலும் அறிஞர் பெருமக்கள் பலர் தங்கள் உரைகளையும் கருத்துகளையும் காலம் காலமாக வைத்துக் கொண்டேயுள்ளனர்.


பெரும்பான்மையாகத் திருக்குறளைக் கண்டித்து கருத்துகளும் நூல்களும் இல்லை.


ஆனால், பகவத்கீதையைக் கண்டித்துப் பல நூல்கள் பல மொழிகளில் வெளிவருகின்றன. சிலர் அந்த நூலில் மானிட இனத்திற்கு எதிரான கருத்துகள் இருப்பதாகப் பார்க்கின்றனர்.  சிலர், அதனை அழித்தேவிட வேண்டும் என்ற கருத்தியலுடனும் இருக்கின்றனர். இருப்பினும் அந்நூல் காலம் கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவே ஒரு தனித்துவமாக இருக்கிறது.


வரும் காலங்களிலும் அந்நூல் பயன்பாட்டில் இருக்கும் என்றே நம்புகிறேன். காலம் கடந்தும் நூல்கள் இருக்குமானால் அவை கூர்ந்து கவனிக்கத் தக்கவை.


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். – குறள் 28; - நீத்தார் பெருமை

நிறைந்த மொழியை உடைய துறந்தாரது பெருமையை, இவ் உலகத்தில் அவர்கள் சொல்லிச் சென்றவையே கண்கூடாகக் காட்டும்.

காண்க குறள் 28.

 

சிலர் போற்றவும் சிலர் தூற்றவும் அந்த நூலில் என்னதான் உள்ளது என்பதே என் ஆர்வத்திற்கு அடிப்படை. அந்த வகையினில் பகவத்கீதையைச் சிந்திக்க முயல்கிறேன்.


சில அடிப்படைச் செய்திகளைப் பார்த்துவிட்டு நாம் பகவத்கீதையினுள் நுழைவோம்.


பொதுவாக, நூல்களின் பயன் இருவகைப்படும். அவையாவன: 1. கருத்துகளைப் பகிர்தல் (Information); 2. மன மாற்றத்திற்கு அடிகோலுதல் (Pleasure).


இந்த இரண்டும் இல்லையென்றால் அவை நூல்களே அல்ல!


ஒரு நூலினைப் படித்து முடிக்கும்போது அது சிறிதேனும் நம்மை உயர்த்திடல் வேண்டும். உயரிய நூல்கள் நம்மை நிச்சயம் உயர்த்தும்.


பெரும்பான்மை கருதி அவ்வகை நூல்கள் மூவகைப்படும். அவையாவன: 1. தோத்திர நூல்கள்; 2. சாத்திர நூல்கள்; 3. சூத்திர நூல்கள்.


தோத்திர நூலில் சாத்திரமும் இருக்கலாம் அவை சூத்திரமாகவும் இருக்கலாம்! அவ்வாறே ஏனைய நூல்களும்!


தோத்திர நூல் மனப்பயிற்சியினைத் தரும், உணர்ச்சிகளை ஒரு முகப்படுத்தும்; சாத்திர நூல் தத்துவ விளக்கங்கள் தரும், நுண் பொருளையும் ஆழ்ந்த கருத்துகளையும் விளக்கும்; சூத்திர நூல் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்.


தமிழில் தோத்திர நூல்களுக்கு உதாரணம் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டன; சாத்திர நூல்களுக்கு எடுத்துக்காட்டு திருமந்திரம், சிவஞானபோதம் உள்ளிட்டன; சூத்திர நூலுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நம் பேராசானின் திருக்குறள்.


சூத்திர வடிவில் அமைந்த சாத்திர நூல் பகவத்கீதை!


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




12 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page