top of page
Search

பகை நட்பாக் கொண்டொழுகும் ... 874, 389

27/08/2023 (905)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

நம் பேராசான் உலகு என்று முடியும் பல குறள்களை அமைத்துள்ளார். அவற்றுள் இரு குறள்களில் தங்கும் உலகு, தங்கிற்று உலகு என்கிறார்.


ஒரு தலைமை எப்படி இருப்பின் அதன் கீழ் இந்த உலகம் விரும்பித் தங்கும் என்பதைச் சொன்னார். காண்க 05/05/2021 (108). மீள்பார்வைக்காக:


செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு.” --- குறள் 389; அதிகாரம் – இறைமாட்சி

பெரியோர்கள் இடித்துச்சொல்லும் போது காதுக்கு கசக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அதனின் நன்மை கருதி பொறுத்துச் செயல்பட்டால் அந்தத் தலைவனின் கீழ் மக்கள் விரும்பி இருப்பார்கள்.


இந்த உலகம் தொடர்ந்து தங்கியிருக்கிறது என்றால் அதற்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறதாம்! அதனைத்தான் இப்போது சொல்லப் போகிறார்.


பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

தமைமைக்கண் தங்கிற் றுலகு.” --- குறள் 874; அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்


பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தமைமைக்கண் = பகையை நட்பாக மாற்றி நட்பு பாராட்டி நடக்கும் தலைமைப் பண்பினைப் பெற்றவர்களிடம்; தங்கிற்று உலகு = இந்த உலகம் தங்கியிருக்கும்.


பகையை நட்பாக மாற்றி நட்பு பாராட்டி நடக்கும் தலைமைப் பண்பினைப் பெற்றவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் தங்கியிருக்கிறது, நிலைத்து இருக்கிறது.


எல்லாரும் கண்ணுக்கு கண், தலைக்குத் தலை என்று பகையை வளர்த்துக் கொண்டே சென்றிருந்தால் இந்த உலகம் இதுவரை இருக்க வாய்ப்பே இல்லை.


பகையை மாற்றி நட்பு என்பது மனிதகுல வளர்ச்சிக்கு உதவும். நட்பு முடியாவிட்டால் நொதுமல் என்கிறார். அஃதாவது, நட்பாகவும் இல்லாமல் பகையாகவும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலை.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page