27/02/2024 (1088)
அன்பிற்கினியவர்களுக்கு:
படல் என்ற பெயர்ச் சொல்லுக்கு மறைப்புத் தட்டி, முங்கில் குச்சுகளால் செய்யப்பட்ட தடுப்புப் பலகை என்றெல்லாம் பொருள்படும். படல் என்ற பெயர்ச்சொல் உறக்கத்திற்கு ஆகி வருகிறது இரு குறள்களில். ஒரு குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். அந்தப் புலம்பல் அவனுக்கு! காண்க 08/10/2022. மீள்பார்வைக்காக:
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண். - 1136; - நாணுத் துறவு உரைத்தல்
அவனின் கண்கள் உறக்கம் இல்லாது தவிக்கும் மடமைக்கு ஊரின் நடுவில் மடல் ஏறுதல் எப்படி என்று திட்டமிடுவதுதான் சரி என்கிறான்.
குறுந்தொகையில், கங்குல் வெள்ளத்தார், கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே! என்றார், காண்க 24/02/2024. அஃதாவது, இரவில் பொங்கும் வெள்ளம் போன்ற துன்பம் இந்தக் கடலைவிடப் பெரிதாகி என்னைச் சிதறடிக்கின்றதே! என்ன செய்வேன்? என்று புலம்பினாள்.
இங்கே, கண் விதுப்பு அழிதலில், இவளின் புலம்பலைப் பார்ப்போம்.
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண். - 1175; - கண் விதுப்பு அழிதல்
கடல் ஆற்றா = மாபெரும் கடலும்கூட என்னை அழித்துவிட முடியாது. எப்படியாவது நீந்தி வென்றுவிடுவேன்; என் கண் காம நோய் செய்த = ஆனால், என் கண்கள், அவர் இல்லாத இந்த இரவில் காம நோய் என்னும்
நீந்திக் கடக்க முடியாத் துன்பக் கடலில் என்னைத் தள்ளிவிட்டன; படல் ஆற்றா பைதல் உழக்கும் = இப்பொது, அவை கண்களை மூடி உறங்க முடியாமல் பெரும் துன்பத்தை அடைகின்றன.
மாபெரும் கடலும்கூட என்னை அழித்துவிட முடியாது. எப்படியாவது நீந்தி வென்றுவிடுவேன். ஆனால், என் கண்கள், அவர் இல்லாத இந்த இரவில் காம நோய் என்னும் நீந்திக் கடக்க முடியாத் துன்பக் கடலில் என்னைத் தள்ளிவிட்டன. இப்போது, அவை கண்களை மூடி உறங்க முடியாமல் பெரும் துன்பத்தை அடைகின்றன.
நான் என்ன செய்ய? அந்தக் கண்கள் நன்றாக அனுபவிக்கட்டும். என்னைத் துயரில் ஆழ்த்திவிட்டு அவை மட்டும் ஓய்வெடுக்க முடியுமா என்ன?
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. - 1176; - கண் விதுப்பு அழிதல்
எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது = எனக்குத் துன்பத்தை அளித்த இந்தக் கண்கள் உறங்க முடியாமல் பெரும் துன்பத்தில் தவிப்பதைப் பார்க்கும்போது; ஓஒ இனிதே = அவற்றுக்கு “வேணும், இன்னும் நல்லா வேணும்!” என்று சொல்லத் தோன்றுகிறது.
எனக்குத் துன்பத்தை அளித்த இந்தக் கண்கள் உறங்க முடியாமல் பெரும் துன்பத்தில் தவிப்பதைப் பார்க்கும்போது, அவற்றுக்கு “வேணும், இன்னும் நல்லா வேணும்!” என்று சொல்லத் தோன்றுகிறது.
நம்மினும் கீழோரை நோக்கி அம்மா பெரிதென்று அக மகிழ்க! என்ற சொலவடையை நாம் முன்பு ஒரு முறை வேறு ஒரு பார்வையில் சிந்தித்துள்ளோம். காண்க 18/11/2023.
இந்தப் பழமொழி ஒரு உளவியல் மருந்து. நம்மைவிடத் துன்பத்தில் உள்ளவர்கள் ஏராளமாக இருக்கும்போது நாம் பரவாயில்லை என்ற ஒரு மனநிலையைத் தரும்.
அதைப் போன்று, அவளைவிட அவளின் கண்கள் துன்பம் அடைவதுபோலக் கற்பனை செய்துகொண்டு மனத்தை அமைதிபடுத்த முயல்கிறாள்!
அவனின் செய்தியாக நாம் அவளுக்குச் சொல்வது:
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே,
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே …
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே …
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன் … கவியரசு கண்ணதாசன், ஆலயமணி, 1962.
அவள் உறங்கினாளா?
நாளைப் பார்க்கலாம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments