top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

பண்என்னாம் பாடற் கியைபின்றேல் ... 573

01/02/2023 (699)

“ கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா? .... கவியரசு கண்ணதாசன்; ஆலயமணி திரைப்படம்

“பாட்டெல்லாம் ஒரு பாட்டாகுமா?” என்று கேட்கிறார் நம் பேராசான்.

அதாவது பாடல்களுக்கு ‘பண்’ என்பது முக்கியம். அதாவது இசை நயம், ஓசை நயம், பொருள் நயம் முதலானவைகள் இல்லையென்றால் அது எப்படி ஒரு பாட்டாக இருக்க முடியும் என்கிறார்.


பண்கள் பாலை, யாழ் முதலிய 103 என்று சொல்கிறார்கள். பண்களை வகை வகையாய் வகைப் படுத்துகிறார்கள். பல்லாயிரம் காலமாக பண் இசைப் பாடல்கள் தமிழிலே ஓங்கி உள்ளது. ‘இசைத்தமிழ்’ என்ற ஒரு பெரும்பகுதி தமிழிலே இலக்கியங்களாக உள்ளது. சுமார் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பாடப்பட்டு வரும் தொடர் மரபும் தமிழுக்கு உண்டு. தேவாரங்கள், திருவாசகம் போன்றவை பண்முறைகளிலேயே பாடப்பட்டு வருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்ந்த பொருளை உள்ளடக்கியும் பாடப்பட்டும், தொடர்ந்து பயன்படுத்தப்படும் மொழி ஒன்று உண்டு என்றால் அது தமிழ்தான் என்பதை உறுதியாகச் சொல்லலாம். பல்லாயிரக்கணக்கான தமிழ் பாடல்கள் காலத்தில் மிக முந்தயையதாக உள்ளது.


“கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?

... கன்னி தமிழ் தந்ததொரு திருவாசகம்

கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்

உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா

வண்ண கண்ணல்லவா ...” கவியரசு கண்ணதாசன்; ஆலயமணி திரைப்படம்

கவியரசும் கண்ணைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்!


இது நிற்க. நாம் குறளுக்கு வருவோம்.


பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.” --- குறள் 573; அதிகாரம் – கண்ணோட்டம்


பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் = பண்ணிசைப் பாடல்கள் என்று எவ்வாறு சொல்ல முடியும் அந்தப் பாடல்களுக்குத் தேவையான நயங்கள் இல்லையென்றால்;

கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் = அதுபோல, கண் எல்லாம் கண்ணாகுமா? அதில் கண்ணோட்டம் எனும் இரக்கம் இல்லாவிட்டால்.


பண்ணிசைப் பாடல்கள் என்று எவ்வாறு சொல்ல முடியும் அந்தப் பாடல்களுக்குத் தேவையான நயங்கள் இல்லையென்றால்;

அதுபோல, கண் எல்லாம் கண்ணாகுமா? அதில் கண்ணோட்டம் எனும் இரக்கம் இல்லாவிட்டால்.


பண்ணுக்கு எப்படி பல வகைகள் என்பது போல கண்ணோட்டமும் பல வகைப்படும் என்பதைக் குறிக்கிறாரா நம் பேராசான்?


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




留言


Post: Blog2_Post
bottom of page