28/08/2022 (547)
நம்மாளு: என்ன அண்ணே, இப்போ எப்படி இருக்கீங்க?
அவன்: அவள் மயிலோ, அணங்கோ என்று நான் பார்த்திருப்ப, அவள் பார்த்த பார்வை ஒரு பெரும் படை கொண்டு தாக்கியது போல இருந்தது என்று சொன்னேன் அல்லவா?
நம்மாளு: என்ன அண்ணே தமிழ் இப்படி ஆயிடுச்சு? சரி அப்புறம் என்ன ஆச்சு?
அவன்: எல்லோரும் எமன், யமன், காலன், நமன், கூற்று இப்படியெல்லாம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்தவர்கள் சொல்வதற்கில்லை. ஆனால், அது எப்படி இருக்கும் என்று முன்னே எனக்குத் தெரியாது. இப்போது தெரிந்துவிட்டது.
நம்மாளு: ஆங்…, அப்புடியா?
அவன்: ஆமாம் தம்பி. ஒரு பக்கம் பார்த்தால் பெண்மையோடு தெரிகிறாள், மறுபுறம் பார்த்தால் அவள் ஒரு பைரவி…
“…
ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி…
அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம் …”
(1975 ல் வெளிவந்த இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தர் அவர்களின் படம், கவிஞர் கண்ணதாசன் கற்பனையில், காந்தக் குரலோன் யேசுதாஸ் அவர்களின் குரலில், இன்னிசை வேந்தர் எம்.எஸ்.வி அவர்களின் இசையில்)
நம்மாளு: அண்ணே, அண்ணே … இங்கே கொஞ்சம் வாங்க
அவன்: ஆமாம் தம்பி. இதை நம்ம பேராசான் குறளில் சொல்லியிருக்கார். இதை ஏதோ எனது கற்பனை என்று நினைக்காதே.
“பண்டறியேன் கூற்று என்பதனை இனியறிந்தேன்
பெண்தகையால் பேரமர்க் கட்டு.” --- குறள் 1083; அதிகாரம் – தகை அணங்கு உறுத்தல்
எமன் எப்படியிருப்பான் என்று இது வரைக்கும் எனக்குத் தெரியலை; இப்போ எனக்குத் தெரிஞ்சுடுச்சு; பெண்மையோடவே பெரிய சண்டை போடும் கண்களும் இருக்கு. அதுவும் அது எமனாயிருக்கு.
பண்டு = முன்பு; கூற்று என்பதனை = எமன் எப்படியிருப்பான் என்று; பண்டறியேன் = இது வரைக்கும் எனக்குத் தெரியலை;
இனியறிந்தேன் = இப்போ எனக்குத் தெரிஞ்சுடுச்சு; பெண்தகையால் =பெண்மையோடவே; பேர் அமர்க் கட்டு = பெரிய சண்டை போடும் கண்களும் இருக்கு. அதுவும் அது எமனாயிருக்கு.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments