top of page
Search

பணைநீங்கிப் பைந்தொடி ... 1234, 1235, 29/03/2024

29/03/2024 (1119)

அன்பிற்கினியவர்களுக்கு:

அவரைச் சந்திக்கும் முன்பிருந்தே, இயற்கையான அழகுடன்தான் என் கண்களும் தோள்களும் இருந்தன. அவருடன் இணைந்த உடன் அவை மேலும் அழகு பெற்றன. அது செயற்கையாகத்தான் இருக்க வேண்டும்.

 

அவர் பிரிந்து நெடுநாளாகிவிட்டது. இப்பொழுது, இந்தத் தோள்களும் கண்களும், அந்தச் செயற்கை அழகை மட்டுமல்ல, அவற்றின் இயற்கை அழகுமல்லவா இழந்து நிற்கின்றன!

 

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணை நீங்கித்

தொல்கவின் வாடிய தோள். – 1234; - உறுப்பு நலன் அழிதல்

 

துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் = என் துணையானவர் நெடுநாளாகப் பிரிந்து இருப்பதனால், அவரால் பெற்ற செயற்கை அழகையும், அது மட்டுமல்ல, அவற்றின் இயற்கை அழகையும் அல்லவா இழந்து நிற்கின்றன இந்தத் தோள்கள்; பணைநீங்கிப் பைந்தொடி சோரும் = அதற்கும் மேல், அவற்றின் திண்மை இழந்து, மெலிந்து இருப்பதனால், நான் அணிந்திருக்கும் வளைகளும் அல்லவா எப்பொழுது நழுவி விழலாம் என்று இருக்கின்றன.

 

என் துணையானவர் நெடுநாளாகப் பிரிந்து இருப்பதனால், அவரால் பெற்ற செயற்கை அழகையும், அது மட்டுமல்ல, அவற்றின் இயற்கை அழகையும் அல்லவா இழந்து நிற்கின்றன இந்தத் தோள்கள், அதற்கும் மேல், அவற்றின் திண்மை இழந்து, மெலிந்து இருப்பதனால், நான் அணிந்திருக்கும் வளைகளும் அல்லவா எப்பொழுது நழுவி விழலாம் என்று இருக்கின்றன.

 

அவளுக்கு மனது ஆறவில்லை. இதுகாறும் அவர் வாராத காரணத்தினால் அவரைக் கொடியவர் என்று சொல்வதனால் ஒன்றும் தவறில்லை என்று நினைக்கிறாள். அந்தக் கொடியவரின் கொடுமையினால் அல்லவா இந்தத் தோள்கள் தம் இயற்கை அழகையும் இழந்துவிட்டன. இதோ, இந்த வளைகள் நழுவுவதும் அதை நான் பிடித்து நிறுத்துவதும் அல்லவா, என் முழு நேர வேலையாகி விட்டது என்கிறாள்.

 

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள். – 1235; உறுப்பு நலன் அழிதல்


கொடியார் கொடுமை உரைக்கும் = அந்தக் கொடியவரின் கொடுஞ்செயலை உலகிற்கு உணர்த்தும் வகையில்; தொடியொடு

தொல்கவின் வாடிய தோள் = நழுவி விழ முயலும் இந்த வளைகளும், தமது இயற்கை அழகையும் இழந்து நிற்கும் இந்தத் தோள்களும் முனைகின்றன.

 

அந்தக் கொடியவரின் கொடுஞ்செயலை உலகிற்கு உணர்த்தும் வகையில், நழுவி விழ முயலும் இந்த வளைகளும், தமது இயற்கை அழகையும் இழந்து நிற்கும் இந்தத் தோள்களும் முனைகின்றன. மறக்கவும் முடியவில்லை; மறைக்கவும் முடியவில்லையே!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.








Comentarios


Post: Blog2_Post
bottom of page