top of page
Search

பண்பெனப் படுவது ... 17/05/2024

17/05/2024 (1168)

அன்பிற்கினியவர்களுக்கு:

பாத்திரம் தீமையால் திரியுமா? அஃது எப்படி நிகழும்?

 

பித்தளை (Brass), வெண்கலம் (Bronze), வெள்ளீயம் (Tin), செம்பு (Copper), அலுமினியம் (aluminum) இப்படிப் பல வகை உலோகங்களால் பாத்திரம் செய்வார்கள்.

 

ஒவ்வொரு உலோகத்திற்கும், அவற்றின் கலவைகளுக்கும் குணங்கள் மாறுபடும்.

 

பித்தளை என்பது செம்பும் (Copper) துத்தநாகமும் (Zinc) கலந்த கலவை. விலை சற்று குறைவாக இருக்கும்.

 

வெண்கலம் என்பது செம்பும் (Copper) வெள்ளீயமும் (Tin) கலந்தது. விலை அதிகமானது.

 

செப்புப் பாத்திரங்களையும், பித்தளைப் பாத்திரங்களையும் நேரடியாகச் சமையலுக்குப் பயன்படுத்த கூடாது. அவை அரிப்புகளுக்கு (corrosion) உள்ளாகும். அவை நம் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இஃது ஒரு வகைத் தீமை.

 

இதைத் தடுக்கும் விதமாகக் கலாய் பூசுவார்கள். கலாய் என்பது வேறு ஒன்றுமல்ல, வெள்ளீயத்தைப் பாத்திரங்களின் உள்பாகங்களில் பூசுவது. அந்தக் காலத்தில் “பித்தளைப் பாத்திரத்திற்கு கலாய்ப் பூசறது”  என்று வீதிகளில் ஓங்கிக் குரலெழுப்பிக் கொண்டு காலாய் பூசுபவர்கள் வருவார்கள். அவர்கள் செய்யும் இராசயண வித்தை கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தத் தலைமுறை கவனிக்க இயலாதவைகளுள் அதுவும் ஒன்று.

 

கலாய் பூசுவதும் அடிக்கடி செய்ய வேண்டும். தவறினால் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

 

நவினத் துருப்பிடிக்கா எஃகு (Stainless Steel) வந்தபின் கலாய்க்கார்கள் காணாமலே போனார்கள்.

 

இப்போது, துருப்பிடிக்கா இரும்புப் (எவர்சில்வர் Stainless steel) பாத்திரங்கள்கூடத் துரு பிடிப்பதனைக் காண முடிகின்றது!

 

செப்புப் பாத்திரங்களில் தண்ணிரைச் சிறிது நேரம் வைத்திருந்து குடிப்பது நல்லது என்று இயற்கை மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது உண்மைதான். ஆனால், அந்தச் செம்பு செம்பாக இருக்க வேண்டும்!

 

அதிக விலை கொடுத்து வாங்கிவந்தால் மறுநாளே கருத்துப் போகின்றது!

 

துருப்பிடிக்காத இரும்பையே துருப்பிடிக்குமாறு செய்யும்போது இது என்ன பிரமாதம்! அந்த நிற மாற்றம் ஒரு வகை அரிப்பு (corrosion). அவற்றை உட்கொள்வது உகந்ததல்ல.

 

99.9% செம்புதானா என்று கண்டறிந்து வாங்க வேண்டும்! வாங்கியபின் அவற்றை அடிக்கடி ஓடும் நீரில் நன்றாகச் சாம்பல் போட்டுத் துலக்க வேண்டும். சாம்பலுக்கு எங்கே போவது என்கிறீர்களா? பரவாயில்லை, சோப்புப் போட்டாவது நன்றாகக் கழுவி பயன்படுத்துங்க.

 

வெறும் வெள்ளீயப் பாத்திரங்களை (Tin) அப்படியே அடுப்பில் வைக்கக் கூடாது. அவற்றுள் சிறிதளவு நீராவது இருக்க வேண்டும். பொதுவாகவே, வெறும் பாத்திரங்களை அப்படியே எரியும் அடுப்பில் வைப்பது உகந்ததல்ல. அதேபோன்று, வெள்ளீயப் பாத்திரங்களை அதிக நேரம் அடுப்புச் சூட்டில் விட்டுவைக்கக் கூடாது. எனவே, எந்த வகைச் சமையலுக்கு எந்த உலோகப் பாத்திரங்கள் சரியானது என்பதனைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆக நல்ல பாத்திரங்களும் தீமையை விளைவிக்கும். கவனம் தேவை என்கிறார் நம் பேராசான்.

 

பாத்திரம் என்றால் Utensils என்றும் பொருள் எடுக்கலாம். பண்பு (Character) என்றும் பொருள் எடுக்கலாம்.  “என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே” என்று நடிகர் சத்தியராஜ் வசனம் பேசுவதுபோல் ஒவ்வொரு பாத்திரமும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றன. நாம்தாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

 

… பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல் - கலித்தொகை பாடல் 133

 

பண்பிலாதவனிடம் சேர்ந்துள்ள பெருஞ்செல்வத்தால் பயன் இல்லாமல் போகும் என்று நிறைவு செய்தார் பண்புடைமையை.

 

சரி, அந்தச் செல்வம் பயன்பட வேண்டுமென்றால் பகிர்ந்துண்ணும் பண்பு இருத்தல் வேண்டும்.

 

பகிர்ந்துண்டு வாழுங்க (அந்தப்)

பழக்கத்தை மாற்றாதீங்க

எங்கே பாடுங்க கா கா கா … உடுமலை நாராயண கவி, பராசக்தி, 1952

 

கா என்றால் காகம் என்ற பொருள் மட்டுமன்று. கா என்றால் காப்பாற்று என்றும் பொருள்படும்.

 

எனவே, பண்புடைமையைத் தொடர்ந்து நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்தை வைக்கிறார்.

 

சற்றேறக் குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவில் உள்ள காகிநாடா என்னும் ஊரில் ஒரு பிச்சைக்காரர் உயிரிழந்துவிட்டார். ஊர்மக்கள் கூடி இறுதி மரியாதையைச் செய்து முடித்தனர். அவர் தங்கியிருந்த இடத்தில் சில மூட்டைகள் காணப்பட்டன. அவற்றைக் காவல் துறையினர் திறந்து பார்த்ததில் அனைவர்க்கும் அதிர்ச்சி.

அந்த மூட்டைகளில் அவ்வளவும் ரூபாய் நோட்டுகள்; எண்ணிப் பார்த்தபோது சில லட்சம் தேறியது! அந்தச் செல்வத்தால் என்ன பயன்?

 

இந்த மாதிரி திருவாளர் பிச்சைக்காரரை நம் பேராசான் பார்த்திருப்பார் போலும். எடுத்தார் அச்சாணியை; தீட்டினார் ஒரு பாடலை!

 

அந்தப் பாடல் என்னவென்று நாளைப் பார்க்கலாம்.

நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments


Post: Blog2_Post
bottom of page