பயன்இல பல்லார்முன் முனிய ... 191, 192
16/11/2021 (266)
20ஆவது அதிகாரத்தில் பயனில சொல்லாமை முக்கியம் என்கிறார் நம் பேராசான்.
எப்பவுமே பயனுடைய சொற்களையே பேசிக் கொண்டு இருக்க முடியுமா? சும்மா கடலை போடவே கூடாதா? ஆங்கிலத்தில் Sweet nothings என்கிறார்களே அதைச் செய்யவே கூடாதா?
நம்ம வள்ளுவப் பெருந்தகை ரொம்பவே கெட்டி. எப்பவுமே, எல்லா சமயத்திலும் கருத்துகளையே பேசனும்ன்னு சொல்லலை. ஆரம்பத்திலேயே ஒரு குறிப்பைச் சொல்லி விடுகிறார். அது என்ன குறிப்பு?
‘பல்லார் முனிய’ ன்னுதான் ஆரம்பிக்கிறார். பலர் முன் பேசும்போது அவர்கள் வெறுக்கும்படி பயன் இல்லாதவற்றைப் பேசக்கூடாதுன்னு சொல்கிறார். அப்படி பயனில்லாதவற்றைப் பேசினால் அவனை எல்லாரும் இகழுவார்கள் என்று ஒரு அறிவுரையாகச் சொல்கிறார்.
ஒரு அவையில் பேசும்போதும், பலர் கூடி இருக்கும் சபையில் பேசும்போதும் ‘பயனில சொல்லாமை’ ரொம்பவே அவசியம் என்பதை வலியுறுத்துகிறார். அது சரி, அப்ப தனியாக பேசும் போது புரளியையும், பயனில்லதவற்றையும் பேசலாமா என்றால் அப்படியில்லை, அதற்குத்தான், ரொம்பவே கவனமாக ‘புறங்கூறாமையை’ (19ஆவது அதிகாரம்) பயனில சொல்லாமைக்கு முன்னாடியே சொல்லிட்டார். சரி நாம குறளுக்கு வருவோம்.
“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.” --- குறள் 191; அதிகாரம் – பயனில சொல்லாமை
முனிய = வெறுக்கும்படி; பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் = அறிவுடையவர்கள் பலர் கூடி இருக்கும் அவையிலே அவர்கள் வெறுக்கும்படி பயனில்லாத பேச்சுகளை பேசுபவன்; எல்லாரும் எள்ளப் படும் = எல்லாராலும் இகழப் படுவான்
பலருக்கு முன்னாடி நாம பேசினால் அதன் விளைவு ரொம்ப அதிகமாக இருக்கும். அதனால்தான் கவனமாக இருக்கனும் என்கிறார். பயனில்லாதவற்றை, நயமில்லாதவற்றை நாம் நண்பர்களிடம் பேசினாலும் தீமைதான். ஆனால், அந்தத் தீமையின் விளைவு தனிப்பட்ட முறையில்தான் இருக்கும் என்கிறார் நம் பேராசான்.
“பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன் இல
நட்டார்கண் செய்தலின் தீது.” --- குறள் 192; அதிகாரம் – பயனில சொல்லாமை
பயன்இல பல்லார்முன் சொல்லல் = பயனில்லாதவற்றை பலர் முன் பேசுதல்; நட்டார் = நண்பர்கள்; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது = நண்பர்களிடம் நயமில்லாதவற்றை, பயனில்லாதவற்றை பேசும் செயலைச் செய்தலின் தீது
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
