பயனில்சொல் பாராட்டு வானை ... குறள் 196
19/11/2021 (269)
நெல்மணிகளில் மேலுறை நீக்கப்பட்டால் அதுதான் அரிசி.
இது எனக்குத் தெரியாதான்னு கேட்கறீங்க? கொஞ்சம் பொறுங்க.
அரிசியை ஒலிவடிவத்தில் ஆங்கிலத்தில் எழுதினால் ‘arice’. இதில் இருந்துதான் ‘Rice’ என்ற ஆங்கிலச் சொல் வந்துள்ளதாக மொழி அறிஞர்கள் சொல்கிறார்கள்.
அரிசி சாகுபடி கிமு 4500ல் தோன்றியதாகச் சொல்கிறார்கள். அதாவது நமது அரிசி ஒரு முன்னோடி.
உறை நீக்கப்பட்ட நெல்மணி முளைக்காது.
இன்னொரு செய்தி, உறை இருந்தாலும் சில சமயம் முளைக்காது! ஏன் என்றால் அதற்கு உள்ளே ஒன்றும் இருக்காது. அஃதாவது அதனைப் பூச்சிகள் தாக்கினாலோ அல்லது இயற்கையாகவே அதற்கு சக்தி இல்லையென்றாலோ மேலே உரை மட்டும் இருக்கும் உள்ளே சரக்கு இருக்காது. இதற்கு ‘பதர்’ என்று சொல்கிறார்கள்.
அதுபோல, நம்மை ‘பயனிலபேசும்’ பூச்சி தாக்கினால் நமக்கு உள்ளே இருக்கும் அறிவு எனும் சரக்கு காணாமல் போய்விடும். அப்போ, நம்மை ஒரு மனுசன் என்று சொல்ல முடியாது. மேல் தோற்றத்திற்கு மனுசன், ஆனால் உள்ளே ஒன்றும் இல்லாததால் அவனை ‘பதர்’ என்றுதான் சொல்லனுமாம். நான் சொல்லலைங்க. நம்ம பேராசான் சொல்கிறார்.
“பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.” --- குறள் 196; அதிகாரம் – பயனில சொல்லாமை
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் = பயன் இல்லாத சொற்களைப் பல்வேறு சமயங்ககளிலும் சொல்பவனை மகன் என்று சொல்லாதீங்க; மக்கட் பதடி எனல் = அவனை மக்களுல் ஒரு பதர்ன்னு சொல்லுங்க.
என் + அல் = எனல். ‘அல்’ வியங்கோள் வினைமுற்று. முதல் ‘எனல்’ சொல்லாதீங்க என்று எதிர்மறையிலும், அடுத்துவரும் ‘எனல்’ சொல்லுங்க என்று உடன்பாட்டிலும் வருவது இந்தக் குறளின் சிறப்பு.
நம் பேராசானுக்கு சட்டுன்னு தோன்றியிருக்கு, ‘பதர்’ எல்லாருக்கும் புரியும் என்று போட்டிருக்கார். இது நம் நெல்லின் தொன்மையையும் குறளின் தொன்மையையும் வெளிப்படுத்துகிறது.
நெல் நன்செய் நிலத்தில் விளைந்தால் ‘வெண்ணெல்’ என்றும், புன்செய் நிலத்தில் விளைந்தால் ‘ஐவன வெண்ணெல்’ என்றும் சங்க காலக் குறிப்புகள் இருக்கு. எதையும் விட்டுவைக்காமல் பயிர் செய்திருக்காங்க!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
