பருகுவார் போலினும் பண்பிலார் ... குறள் 811
04/01/2022 (313)
குணக்கேடு கொண்டவர்களின் நட்பு - தீநட்பு.
நன்றாகப் பழகுவார்கள். மேலே விழுந்து, விழுந்து உபசரிப்பார்கள். கண்களினாலேயே மலர்ந்து கவிழ்ப்பார்கள். இன்பதைக் காட்டுவார்கள். இனிய வார்த்தைகள் பேசுவார்கள். ஆனால் எல்லாம் காரியம் முடியும் வரைதான். அவர்கள் குணம் அவ்வளவே. நட்பிற்கு ஏற்றவர்கள் அல்லர். பகைக்கும் பொறுத்தமானவர்கள் அல்லர்.
அவர்களைத் தவிர்க்க முடியாது என்றால் அவர்களை ‘நொதுமல்’ என்று பார்த்தோமே அந்த வகையிலே தள்ளியே வைத்திருக்க வேண்டும் – பகையுமிலாமல், நட்பும் இல்லாமல்.
“பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலில் குன்றல் இனிது.” --- குறள் 811; அதிகாரம் - தீநட்பு
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை = காதல் மிகுதியால் பருகுவார் போல் இருந்தாலும் நற்குணம் இல்லாதவர்களின் நட்பு; பெருகலில் குன்றல் இனிது = அது வளர்தலின் தேய்தல் நன்று
‘நற்குணம் இல்லார்’ என்பதன் மூலம் ‘தீக்குணம் ‘ உடையார் என்பது தெளிவு.
இவ்வாறு பொருள் கொள்ளும் முறையை ‘அருத்தாபத்தி நியாயம்’ என்கிறார்கள்.
‘பகலிலே சாப்பிடுவதே இல்லை; இருந்தாலும் பருத்திருக்கான்’ அது எப்படி?
அது எப்படி என்றால், இரவிலே சாப்பிட்டு இருப்பான் என்று பொருள் கொள்கிறோம் அல்லவா, அதுதான் அருத்தாபத்தி.
“அந்தம்மா வருவது அழகு; இந்தம்மா போவது அழகு” என்பதுபோல தீநட்பு ‘குன்றல் இனிது’ என்கிறார்.
தீநட்பின் பொது இலக்கணத்தை இந்தக் குறள் மூலம் விளக்கும் நம் பேராசான் சிறப்பு இலக்கணங்களை அடுத்துவரும் குறள்களில் தொடர்கிறார். நாமும் தொடருவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
