top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

பரிந்து அவர் நல்கார் ... 1248, 1247, 1249, 06/04/2024

06/04/2024 (1127)

அன்பிற்கினியவர்களுக்கு:

நெஞ்சே நீ பொய்யாக நடிக்கிறாய் என்றாள் குறள் 1246 இல். அடுத்து, நீ

காமத்தை விட்டுவிடு, இல்லை என்றால் வெட்கத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு நான் படுகிறபாடு இருக்கே என்னாலே முடியலை என்று புலம்புவதுபோல அமைத்திருந்த குறளை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 02/09/2021. மீள்பார்வைக்காக:

 

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேனிவ் விரண்டு. - 1247; - நெஞ்சொடு கிளத்தல்

 

ஒன்று காமத்தை விட்டுத்தொலை. இல்லையென்றால், நாணத்தையாவது விடு நல்ல நெஞ்சே. என்னாலே இரண்டையும் தாங்க முடியாது.


திருவிளையாடல் திரைப்படத்தில் ஒரு காட்சி: கோவிலுக்குள் நாகேஷ், தானாகவே புலம்பிக் கொண்டிருப்பார். “வரமாட்டான்.. வரமாட்டான்.. நம்பாதே, அவனை நம்பி நம்பி புலமை போச்சு; கத்தி கத்தி என் குரலும் போச்சு” என்பார்.


அதுபோல, அவள் “வரமாட்டார்… வரமாட்டார்… நம்பாதே, அவரை நம்பி நம்பி என் வாழ்க்கையும் போச்சு; அழுது, அழுது என் அழகும் போச்சு… அவரை எண்ணி எண்ணி அவர் பின்னாலேயே செல்ல முயல்கிறாயே என் மட நெஞ்சே …” என்கிறாள்.


பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதையென் நெஞ்சு. – 1248; - நெஞ்சொடு கிளத்தல்


பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கிப் பிரிந்தவர் பின் = நம்மிடம் பரிவு காட்டி அவர் விரைந்து வந்து அன்பு செய்யப் போவதில்லை என்று ஏங்கிப் பிரிந்து சென்ற அவர் பின்; செல்வாய் பேதை என் நெஞ்சு = ஓடப் பார்க்கிறாயே என் மட நெஞ்சே!


நம்மிடம் பரிவு காட்டி அவர் விரைந்து வந்து அன்பு செய்யப் போவதில்லை என்று ஏங்கிப் பிரிந்து சென்ற அவர் பின், ஓடப் பார்க்கிறாயே என் மட நெஞ்சே!


ஓர் ஊஞ்சலைப் போல அவள் எண்ணம் இங்கும் அங்குமாக அலை பாய்கிறது.

என் நெஞ்சமே, உண்மையிலேயே நீ பேதைதானா? அவர்தாம் உன்னுள்ளேயே இருக்கிறாரே! பின் யாரைத் தேடி நீ ஓடிக் கொண்டிருக்கிறாய் என்று வினாவைத் திருப்பிவிடுகிறாள்!


உள்ளத்தார் காத லவராக உள்ளி நீ

யாருழை ச் சேறி என் நெஞ்சு. – 1249; - நெஞ்சொடு கிளத்தல்


உழை = இடம்; சேறி = செல்வது; உள்ளி = நினைத்து, போற்றி;

என் நெஞ்சு = என் நெஞ்சமே; காதலவர்  = உன்பால் அன்பு கொண்ட அவர்; உள்ளத்தார் ஆக  நீ உள்ளி = உன்னுள் இருப்பவர் என்றுதானே நீ போற்றிக் கொண்டிருக்கிறாய்; யார் உழைச் சேறி = பின் யாரைத் தேடி இங்கும் அங்குமாக வெளியே சென்று தேட முயல்கிறாய்!


என் நெஞ்சமே, உன்பால் அன்பு கொண்ட அவர், உன்னுள் இருப்பவர் என்றுதானே நீ போற்றிக் கொண்டிருக்கிறாய். பின் யாரைத் தேடி இங்கும் அங்குமாக வெளியே சென்று தேட முயல்கிறாய்!


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


bottom of page