top of page
Search

பரிந்தோம்பிப் பற்றற்றேம் ... 88, 228

15/09/2023 (923)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

“புதையலைப் பூதம் காத்தது போல”

“நாய் பெற்ற தெங்கம் பழம்”

போன்ற பழமொழிகள் நம் வழக்கத்தில் உண்டு. அஃதாவது, தமக்குக் கிடைத்ததை யாருக்குமே பயன்படுத்தாமல் அந்தப் பொருள்கள், வாய்ப்புகள் பின்னாளில் பயன்படாமலே போகும்!


வாய்ப்பு அமையும் போதே உதவிடல் வேண்டும். பிறகு உதவலாம் என்று இருந்தால் அந்த வாய்ப்பு அப்போது நமக்கே அமையாமலும் போய்விடக்கூடும்.


நம் ஔவைப் பெருந்தகை நல்வழியில் சொன்னதை நாம் முன்பொருமுறைப் பார்த்துள்ளோம். காண்க 11/07/2021 (139). மீள்பார்வைகாக:


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; கூடுவிட்டு இங்கு

ஆவிதான் போயின் பின்பு யாரே அனுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.” --- பாடல் 22; நல்வழி; ஔவையார்


நம் பேராசான் ஈகை என்னும் அதிகாரத்தில் சொன்னக் குறளையும் பார்த்துள்ளோம். காண்க 11/07/2021(139). மீள்பார்வைக்காக:


ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்துஇழக்கும் வன்க ணவர்.” --- குறள் 228; அதிகாரம் - ஈகை


ஈகைக்குச் சொன்னக் கருத்தையே விருந்தோம்பலிலும் வைக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.


வரும் விருந்தினர்களை உபசரிக்க மனமில்லாமல் சேர்த்து வைத்தப் பொருள் ஒரு நாள் நம்மிடமிருந்து விலகிவிடும். அந்த நேரத்தில் ஐயகோ நம்மிடம் இருக்கும்போதே விருந்தோம்பி மகிழாமல் இருந்தோமே என்று வருந்தவும் நேரிடும் என்கிறார்.


“பருவத்தே பயிர் செய்” என்பதும் “ஆடிப் பட்டம் தேடி விதை” என்பதும் ஏதோ விவசாயப் பெருமக்களுக்கு என்று நினைத்துவிடலாகா.


பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.” --- குறள் 88; அதிகாரம் – விருந்தோம்பல்


விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் = தமக்குக் கிடைத்தப் பொருள்களால் விருந்தினர்களின் மனம் மகிழ உளம் நிறைய உபசரிக்காமல் தயங்கியவர்கள்; பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் = பின்னாளில், ‘ஐயகோ’ இது நாள்வரை கட்டிக்காத்தப் பொருள்கள் தம்மைவிட்டு விலகிவிட்டதே என்று வருந்துவர்.


தமக்குக் கிடைத்தப் பொருள்களால் விருந்தினர்களின் மனம் மகிழ உளம் நிறைய உபசரிக்காமல் தயங்கியவர்கள், பின்னாளில், ‘ஐயகோ’ இது நாள்வரை கட்டிக்காத்தப் பொருள்கள் தம்மைவிட்டு விலகிவிட்டதே என்று வருந்துவர்.


அது மட்டுமல்ல நம்மை கவனிக்க யாரும் இல்லையே என்ற நிலையும் வரலாம்!


எனக்கென்னமோ, நிலை உயர உயரத்தான் பகிர்ந்துண்ணும் பழக்கம் குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இல்லாதவர்கள் அவர்களிடம் இருப்பதை அவர்களைப் போன்றோர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதை இப்போதும் கண்கூடாகப் பார்க்கலாம்.


நான் சிறியவனாக இருந்த காலத்தில் எப்போது வேண்டுமானாலும் விருந்தினர்கள் வீட்டிற்கு வருவார்கள். அந்தச் சமயத்திலும் வீட்டில் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு அவர்களுக்கு உணவைச் சமைத்துத் தருவார்கள். வந்த விருந்தினர்களும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். வீட்டில் ஏதும் இல்லை என்றால் அண்டை வீட்டுக் கதவைத் தட்டி உதவி கேட்கவும் தவற மாட்டார்கள்.


ஆனால், இப்போதோ முன் அனுமதி பெற்றே ஒரு வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலைமை. அங்கே சென்றாலும் “எப்படா கிளம்பலாம்” என்றதொரு நிலை. ஆச்சரியம்தான்! எப்படி இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன? விருந்தினர்கள் இப்போது அத்துமீறி நுழைந்த ஊடுறுவல்களாகிப் போனது.


விருந்தினர்களின் தகுதியைப் பொறுத்தே அனுமதி. அனுமதி கிடைத்தாலும் எவ்வளவு மணித் துளிகள் ஒரு வீட்டில் இருக்கலாம் என்ற நிலை.


எல்லோரும் மேலே இருப்பவர்களையே பார்த்துக் கொண்டுள்ளோம். எதன் பின்னாலோ பைத்தியம் பிடித்தாற்போல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இது நிற்க.


அப்போது ஆவலுக்கு நட்பையும், காவலுக்கு நாய்களையும் வளர்த்தோம். இப்போது காவலுக்கு மனிதர்களையும் ஆவலுக்கு நாய்களையும் வளர்கிறோம்.


நாய்களை குறைத்து மதிப்பிடுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டா.

நாம் பலவாறு ஏசினாலும் நாம் செய்த ஒரு சிறிய உதவிக்காக நாய்கள் தன் வாழ்நாள் முழுவதும் வாலாட்டும். ஆனால் மனிதனோ ஆயிரம் உதவிகள் செய்திருந்தாலும் ஒரே ஒரு முறை உதவ முடியவில்லை என்றால் உடனே கடித்துக் குதறுவான்!


செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான் ... ம்ம்.. யோசிக்கணும்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Post: Blog2_Post
bottom of page