03/05/2022 (431)
என்னதான் உருண்டாலும், உடம்பெல்லாம் எண்ணையைத் தடவிக் கொண்டே உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்ன்னு சொல்வாங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா?
ஒவ்வொரு அரிசிப் பருக்கையிலும் நம்ம பெயரை எழுதி வைத்திருக்காம். அது நமக்கு வந்து சேர்ந்துடுமாம்.
கடல் அளவு தண்ணீர் இருந்தாலும், நாம் நம்ம பானையை எவ்வளவுதான் அழுத்தி அழுத்தி தண்ணீரை முகர்ந்தாலும் ஒரு பானை தண்ணீர் மட்டும்தான் எடுக்கமுடியும் ஒவ்வொரு முறையும். (Water is in-compressible என்பதை நம்ம ஔவை பெருந்தகை அப்பவே சொல்லிட்டு போயிருக்காங்க).
“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.” --- மூதுரை 19; ஔவையார்
நாழி = ஒரு படி = இரண்டு உரி (அளவைகள் காண்க 15/01/2022 (324))
முகவாது = கொள்ளாது, மொள்ளாது, எடுக்காது; நால்நாழி = நான்கு படி; நிதியும் கணவனும் நேர்படினும் = நல்ல செல்வமும், நல்ல கணவனும் அமைந்திருந்தாலும்; தத்தம் விதியின் பயனே பயன் = நமக்கு என்ன எழுதியிருக்கோ அவ்வளவுக்குத்தான் சுகம் கிடைக்கும்.
யோகம், போகம் என்று இரண்டு இருக்கு. இந்த இரண்டும் வேணும். யோகம் என்றால் ஒன்று நம்மைச் சேர்வது; போகம் என்றால் நாம் அதை சுகமாக அனுபவிப்பது.
இரண்டு கிரவுண்டிலே விடு இருக்கும். ஆனா, அதை யார் அனுபவிக்கறாங்கன்னு பார்த்தா அந்த வீட்டின் காவலளியா இருப்பாங்க. அந்த வீட்டின் உரிமையாளர்கள் வேறு எங்கோ ஒரு சின்ன விட்டில் இருந்து கொண்டு பணி செய்து கொண்டிருப்பார்கள்! இது நிற்க. நாம குறளுக்கு வருவோம்.
நம் பால் சேர வேண்டாம் என்று இருப்பது சேராதாம் (எனக்கு இல்லை, எனக்கு இல்லைன்னு தருமி, திருவிளையாடல் திரைப்படத்தில் சொல்வது போல!); நமக்குன்னு எழுதிவைத்திருப்பதை விட்டு எரிந்தாலும், அது மீண்டும் நம்மிடமே வந்து சேருமாம்.
“பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.” --- குறள் 376; அதிகாரம் – ஊழ்
பரியினும் = பரிந்து, விடாம காப்பாற்றினாலும்; பாலல்ல ஆகாவாம் = நம் பால் சேர வேண்டாம் என்று இருப்பது சேராதாம்; உய்த்தல் = அனுபவித்தல் என்பது ஒரு பொருள். இன்னொரு பொருள் அழித்தல். இங்கே அழித்தல் எனும் பொருளில் வருகின்றது; சொரிதல் = கொட்டுதல், விட்டு எரிதல், தூக்கிப் போடுவது; தம உய்த்துச் சொரியினும் போகா =நமக்குன்னு எழுதிவைத்திருப்பதை விட்டு எரிந்தாலும், அது மீண்டும் நம்மிடமே வந்து சேருமாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments