top of page
Search

பற்றுள்ளம் என்னும் இவறன்மை ... 438,

08/04/2021 (81)

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்?


இவறியான் செல்வம் உயற்பாலது இன்றிக் கெடும் என்று குறள் 437 ல் சுட்டிய வள்ளுவப்பெருந்தகை மேலும் தொடர்கிறார். இதோ குறள் 438:


பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று.” --- குறள் 438; அதிகாரம் - குற்றங்கடிதல்

பற்றுள்ளம் என்னும் = அதீத ஆசை, பற்று எனும்; இவறன்மை = இவறல் + தன்மை; இவறல் தன்மை= தேவைக்கு உதவாத கஞ்சத்தன்மை; எற்றுள்ளும் = குற்றத்தன்மை எல்லாவற்றுள்ளும்; எண்ணப் படுவதொன்று அன்று = எண்ணப்படாது (அதற்கும் கீழேயே வைக்கப்படும்) கீழிலும் கீழாக வைக்கப்படும்.

அதீத பற்று கொண்டு தன் பொருளை மறைத்து, ஒருவனின் தேவைக்கு உதவாதகஞ்சத்தன்மை, குற்றங்களிலெல்லாம் கீழானது.


படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்

நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே. – திருமூலப்பெருமான் திருமந்திரம்


சாமிக்கு படைத்தால் அது போய் சாமிக்கு சேருமான்னு தெரியாது, அது தேவையானவர்களுக்கும் போய் சேராது. ஆனால், தேவையுள்ள ஒரு வயிற்றுக்குப் போட்டால் அது அந்த பகவானுக்கு நிச்சயம் போய் சேரும்.

பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்தாலும், பல வகையிலே வழிபாடு செய்தாலும் காணக்கிடைக்காத கடவுளை, தேவனை தேவையுள்ளவனுக்கு உதவுவதன் மூலம் காணலாம். இக் கருத்தையே எல்லா மதமும் முழங்குகிறது.


‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்றார் அறிஞர் அண்ணா.

கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சி அவர்கள் அறிய மாட்டர்களா? நான் கேட்கலை. பேராசானே கேட்கிறார் குறள்


ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர்.” --- குறள் 228; அதிகாரம் - ஈகை

தாம்உடைமை = தம்முடைய பொருட்களை; வைத்து = தேவைப்படுபவர்கட்கு உதவாது காத்து வைத்து; இழக்கும் = பின் யாருக்கும் பயனில்லாது அழிக்கும்; வன்கணவர் = கொடியவர்கள்; ஈத்துவக்கும் இன்பம் = கொடுப்பதினால் வரும் இன்பத்தை; அறியார்கொல் = அறியமாட்டார்களா?


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்






 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page