பழைமை எனப்படுவது ... குறள் 801
22/12/2021 (302)
நட்பின் இலக்கணங்களை 79வது அதிகாரத்திலும், நட்பை ஆய்ந்து கொள்ள வேண்டும் என்று நட்பாராய்தல் எனும் 80வது அதிகாரமும் வைத்தார் நம் பேராசான்.
இப்போது நட்பு நன்றாக வளர்ந்து நீண்ட கால நட்பாகிவிட்டது. பழைய நட்பு இது என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. ஒருவர் மேல் மற்றவர்க்கு உரிமை அதிகரிக்கிறது. ஒருவற்குத் தேவையானவற்றை மற்றவர் உரிமையுடன் செய்யலாம் என்ற நிலைமை தோன்றுகிறது. இந்த உரிமையை நம் ஐயன் ‘பழைமை’ என்றும் ‘கெழுதகைமை’ என்றும் குறிக்கிறார். அந்த ‘பழைமை’யால் கொஞ்சம் அதிகமாகவே உரிமையை எடுக்கலாம் சிலபோது. அந்தச் சமயத்தில் பொறுக்க வேண்டும் என்கிறார்.
இதுவெல்லாம் தலைமைக்குச் சொல்லிக்கொண்டு வருகிறார். தலைமை இவ்வாறு இருக்க வேண்டும் என்கிறார்.
இருப்பினும், இவ்வாறு இருந்தால் நாம் தலைமைக்குச் செல்லலாம் என்பது கூறாமல் கூறியது.
இப்போது ‘பழைமை’யின் இலக்கணங்களைத் தொகுக்கிறார் ‘பழைமை’ எனும் 81ஆவது அதிகாரத்தில்.
“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.” --- குறள் 801; அதிகாரம் – பழைமை
பழைமை எனப்படுவது யாதெனின் = பழைமை என்று எதைச் சொல்லலாம் என்றால்; கிழமை = உரிமை; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு = அது பழைமையோர் உரிமையால் செய்தவற்றை விலக்காமல், தாழ்த்தாமல் கடந்து செல்வதுதான் பழைமைக்கு இலக்கணம்.
கிழமையால் செய்வது என்பது: கேட்காமலே செய்வது; நண்பனுக்கு வரப்போவதை தடுக்கும் விதமாக சிலச்செயல்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவது; தனக்கு வேண்டியதை நண்பனிடம் கேட்காமலே எடுத்துக் கொள்வது; பணிவு மற்றும் அச்சம் இன்றி பழகுவது; இன்னும் பல.
தலைமைக்குச் சொல்லும் முன்பே பழைமையாகப் போகும் நட்பிற்கு ஏற்கனவே ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறாம். அது என்னவென்று நாளைப் பார்க்கலாம் என்றார் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
