top of page
Search

பொச்சாப்புக் கொல்லும் ... குறள் 532, குறள் 1041

Updated: Nov 27, 2021

25/11/2021 (275)

‘வெகுளி’ என்பதை அப்பாவித்தனத்திற்கு பயன்படுத்துகிறோம் இப்போது. ஆனால் அப்போது அதை ‘சினம்’ என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.


‘நிரப்பு’ என்ற சொல்லுக்கு இல்லாததை இட்டு நிரப்பு (fill-up) என்பதுதான் தற்காலப் பொருள். அந்தக் காலத்தில் ‘ஒன்றும் இல்லாம இருப்பதுதான்’ நிரப்பு. அதாங்க வறுமையை குறிக்க ‘நிரப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்காங்க. இது நிற்க.


எதெல்லாம் அறிவை அழிக்கும் என்ற கேள்விக்கு பல பதில்கள் இருக்கலாம். ஆனால், எல்லாக் காரணத்துக்கும் அடிப்படையைப் பார்த்தால் ‘இல்லாமை’தான். இல்லாமை ஒருவனின் அறிவை அழிக்கும்.


குற்றங்களுக்கு அடிப்படை இல்லாமைதான். அளவிறந்த ஆசையால் செய்யும் குற்றங்கள் தனிரகம். அது அவர்களுக்கு பல இருந்தாலும் அது ஒன்று இல்லையே என்று செய்யும் குற்றம். பாருங்க, அதுவும் இல்லாமையாகவே இருக்கு!


சரி, இது எதற்கு இப்போதுன்னு கேட்கறீங்க, அதானே? கொஞ்சம் பொறுங்க.


பொச்சாப்பு, பொச்சாப்புன்னு ஒன்று பார்த்தோம் இல்லையா?


மறந்திருக்க மாட்டீங்க, அதாங்க, மனத்தின் மிதப்பினால் வரும் மறவி, அது நமக்கு இருக்கும் புகழைக் கொல்லும், வரும் புகழையும் தடுக்கும் என்பது நமக்குத் தெரியும்.


ஆனால், அதற்கு ஒரு உவமை வேண்டும் என்று நம் பேராசான் நினைத்திருக்கிறார். எதைச் சொன்னால் சரியாக இருக்கும், அதைவிட ஒரு சரியான உவமையே இருக்கக்கூடாது என்று எண்ணியிருப்பார்ன்னு நினைக்கிறேன். அப்படி ஒரு உவமையைச் சொல்லியிருக்கார்.


அந்த உவமையைப் பார்பதற்கு முன்னாடி, நாம ஏற்கனவே ஒரு குறளைப் பார்த்திருக்கோம். அதைக் கொஞ்சம் கவனம் பண்ணுவோம்.


‘இல்லாத கொடுமை’ க்கு உவமை இல்லாத கொடுமையேதான். வேற தேடிப்பார்த்தேன். சரியா வரலைன்னு நம்ம வள்ளுவப் பெருமான் சொல்லியிருந்த குறள்தான்:


இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னாதது.” --- குறள் 1041; அதிகாரம் – நல்குரவு


இப்போ, நாம அந்தப் பொச்சாமை உவமைக்கு வருவோம்.


பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக்கொன் றாங்கு” --- குறள் 532; அதிகாரம் - பொச்சாவாமை


அறிவினை நிச்ச நிரப்புக் கொன்றாங்கு = நாள் தோறும் இரந்து உண்ணவேண்டிய நிலைமை, அந்த வறுமை, ஒருவன் அறிவினைக் கொல்வதைப்போல; புகழைப் பொச்சாப்பு கொல்லும் = ஒருவனின் புகழைப் பொச்சாப்புக் கொல்லும்


இன்மைக்கு அடுத்தது பொச்சாவாமைதான் போல.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






20 views1 comment
Post: Blog2_Post
bottom of page