பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை ... குறள் 533
26/11/2021 (276)
இந்தப் பொச்சாப்பு இருக்கு இல்லையா, அதாங்க, கடமையைப் பொருட்படுத்தாமல் அலட்சியம் பண்ணுவது, களிப்பில் மறந்துவிடுவது போன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு புகழ் என்ற ஒன்று கிடைக்காதாம்.
இதற்கு என்ன சாட்சின்னு கேட்டீர்கள் என்றால் நீங்களே கண்கூடாகப் பார்க்கலாமாம். உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் இது உண்மைதானாம். எப்படிப்பட்ட அறிஞர்களாக இருந்தாலும் அதே நிலைதானாம். இந்தப் பொச்சாப்பினால் வரும் இகழ்ச்சி சன்யாசிகள் முதல் சம்சாரிகள்வரை எல்லாருக்கும் பொதுதானாம். இது ஒரு universal truth (உலகளாவிய உண்மை) என்கிறார் நம் பேராசான்.
“பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.” --- குறள் 533; அதிகாரம் - பொச்சாவாமை
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை = களிப்பில் கடமையை மறப்பவர்க்கு இல்லை புகழ்மை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு = அது உலகத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும் எந்த அறநூலைப் பின்பற்றினாலும் அதான் உண்மை.
ஆங்கிலத்தில் “history repeats” ன்னு சொல்கிறார்கள்.
எப்போது?
நாம் கடந்த காலத்தை மறந்துவிட்டால்!
“Those who cannot remember the past are condemned to repeat it” --- Spanish Philosopher George Santayana (1863 – 1952)
"கடந்த காலத்தை நினைவில் கொள்ள முடியாதவர்கள் அதை மீண்டும் கற்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்படுவார்கள்.” --- ஸ்பானிய தத்துவ ஞானி ஜார்ஜ் சந்தயானா. (என்னால் முடிந்த அளவிற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன்)
வாழ்க்கை முழுவதும் படிப்பினைகள்தான். நாம சரியாக கற்கும்வரை அது நம்மை விடாது. கவனத்திலே வைத்துக் கொண்டால் தப்பிக்கலாம். இல்லையென்றால் அ,ஆ,இ,ஈ… லிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்!
கவனத்தில் வைப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
