புணர்ச்சி பழகுதல் வேண்டா ... குறள் 785
08/12/2021 (288)
நேற்றைய குறளுக்கு ஒரு அருமையான உண்மை நிகழ்வினை எனதருமை நண்பர் பதிவிட்டிருந்தார். ( காண்க www.easythirukkural.com) அது என்னவென்றால், ஒரு அம்மாவிற்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் அமெரிக்காவில் இருக்கிறார். மகன் பெங்களூருவில் இருக்கிறார். அந்த அம்மாவிற்கு சில சொத்துகள் இருக்கின்றன. அதை தனக்குத் தருமாறு மகன் கேட்க, அம்மா தயங்குகிறார். கோபம் கொண்ட மகன் தன் வயதான அம்மாவைத் தனியாக விட்டுவிட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். அம்மாவிற்கு உடம்புக்கு முடியாமால் போகிறது. மகனுக்கு மனமில்லை. மகளுக்குத் தெரியவர பதறுகிறார். தான் வருவதற்கோ இரு நாட்களாவது ஆகும். என்ன செய்ய என்று வருந்திக் கொண்டு இருக்கும் போது அவருக்கு facebook (முகநூல்) என்கிறோமே அதில் ஒரு நண்பியின் கவனம் வர அவரைத் தொடர்பு கொள்கிறார். முன் பின் பார்த்ததில்லை. அந்த நண்பி உடனே சென்று அந்தத் தாயை மருத்துவமனையில் சேர்த்து அவசரச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார். அதற்கு செலவோ இரண்டு லட்சங்களுக்கும் மேல். அந்த நண்பியே யாரையும் எதிர்பாராமல் அந்தப் பணத்தைக்கட்டி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார். அந்தத் தாயை காப்பாற்றி விடுகிறார். எதுகுறித்தும் அந்த மகளுக்குத் தெரியாது அவர் பெங்களூரு வரும் வரை. இந்த இக்கால நட்பைக் குறித்து என்ன சொல்ல! மனம் நெகிழ்கிறது. இந்தப் பகிர்வையிட்ட என் நண்பருக்கு நன்றிகள் பல.
நேரிலே பார்த்ததில்லை, கலந்து பழகியதும் இல்லை. ஆனால், அந்த நட்புணர்வு அங்கே ஆழமாக வேர்விட்டு இருக்கிறது.
சங்க காலத்தில், கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையே இருந்த நட்பினைப் பற்றி தற்போதும் படிக்கிறோம்.
நட்பிற்கு, நேரிலே கூடுவதும் தேவையில்லை, கலந்து சிரித்துப் பேசி பழகுவதும் தேவையில்லை. அந்த நட்புணர்வு மட்டும் நண்பர்களிடையே இழையோடி விட்டால். அந்த உணர்வே அவர்களுக்குள் உரிமையைக் கொடுக்கும்.
இதுதான் நட்பின் இலக்கணம். இதை அப்படியே படம் பிடித்து வைத்துள்ளார் நம் வள்ளுவப் பெருந்தகை.
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.” --- குறள் 785; அதிகாரம் - நட்பு
புணர்ச்சி பழகுதல் வேண்டா = நேரிலே கூடுவதும், கலந்து பேசி மகிழ்வதும் தேவையில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் = இருவருக்கும் இடையே இருக்கும் ஒத்த உணர்ச்சியே நட்பெனும் உரிமையை நிலை நாட்டும். கிழமை = உரிமை
இது, இதுதான் நட்பு!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
