05/09/2022 (555)
இன்பத்துப் பாலில் முதல் அதிகாரம்(109), அவன் அவளைப் பார்த்த உடன் நடக்கும் தகை அணங்கு உறுத்தலில் ஆரம்பிக்கிறார். அடுத்த அதிகாரம் உள்ளக்கிடக்கைகளை இருவரும் அறிவதால் ‘குறிப்பறிதல்’ அதிகாரத்தை (110) தொடர்ந்து வைத்தார். குறிப்பறிதலை நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம்.
அடுத்ததாக ‘புணர்ச்சி மகிழ்தல்’ எனும் அதிகாரம் (111). புணர்ச்சி மகிழ்தல் என்பதை களவு ஒழுக்கம் என்று குறித்தார்கள் பண்டை தமிழ் மக்கள்.
காதலர் கூடினால் பேசவும் வேண்டுமோ? என்பதைப் போல! கூடியபின் அந்த காதல் இன்பத்தை நினைத்து மகிழ்வது.
தொல்காப்பியத்தில் கூறப்படும் அகத்திணையில் இருக்கும் களவியலின் பல நிலைகளைத் தவிர்த்து நம் பேராசான் நேராக மெய்யுறு புணர்ச்சிக்கு வந்துவிட்டார். அதாவது கூடலின்பத்திற்கு வந்து விட்டார்.
இதற்கு பரிப்பெருமாள் எனும் பெருந்தகை சொல்வது என்னவென்றால் இது ‘உழுவலன்பு’ உற்றவர்களிடம் நிகழ்வது என்கிறார். அது என்ன ‘உழுவலன்பு’?
உழுவலன்பு என்றால் பல பிறப்புகளிலிலும் தொடரும் அன்பு. அதாவது, “இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று…” என்பதைப் போல.
இதைச் சொல்லிவிட்டு வட நூல் அறிஞர் பெருமக்கள் இடக்கரப் பொருளாகச் சொல்லிச் சென்ற புணர்ச்சியையும் அதற்கு முன் நிகழும் பலவற்றையும் அடக்கி கூறிவிட்டார் என்கிறார் பரிமேலழகப் பெருமான்.
இடக்கரப் பொருள் என்றால் தற்காலத்தில் 18+ அல்லது ‘A’ adults only சான்றிதழ் சமாச்சாரங்கள். இதனை குறிப்பின் மூலம் சொல்லிச் செல்வது ‘இடக்கரடக்கல்’.
நம் பேராசானின் உருவகங்களும் கற்பனைகளும் மிகவும் நாகரீகமாகவும், நாசூக்காகவும் அமைந்திருப்பது அவரது சிறப்பினைக் குறிக்கிறது. அவளின் மென் தோளினையும் கண்ணையும் மட்டுமே வைத்துக் கொண்டு கதையை முடித்துவிட்டார். பிற கவர்ச்சி உறுப்புகளுக்கு இடம் கொடுக்கவில்லை.
இது எப்படி இருக்கிறது என்றால் வட நூல்களில் விரித்துச் சொல்லிய நகிலை வருடல், ஆடை நெகிழ்தல், இறுகத் தழுவல், இதழ் சுவைத்தல் முதலியன தவிர்க்கப் பட்டுள்ளன என்று பரிபெருமாள் பெருந்தகையும், பரிமேலழகப் பெருமானும் குறிக்கிறார்கள்.
எப்படி, அப்படி சொல்லியிருக்கிறார் என்பதை நாளை முதல் பார்க்கலாம் என்றார் என் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments