20/06/2024 (1202)
அன்பிற்கினியவர்களுக்கு:
உண்மையான காரணங்கள் ஏதுமில்லாவிட்டாலும், மனம் எவ்வாறெல்லாம் கற்பனை செய்து ஊடல் கொள்ளும் என்பதனைச் சொல்லப் போகிறார். இந்த அதிகாரம் உளவியலின் உச்சம் என்றே சொல்லலாம். எனவே இதனை புலவி நுணுக்கம் என்கிறார்.
அவள் உணர்ச்சிகளின் கூவியல் என்பதனால் அவளிடம் ஏற்படும் கற்பனைகளைச் சுவைபடச் சொல்கிறார். அனைத்துப் பாடல்களுமே கவிதை, கவிதை …
அவன் வரும் நேரம்தான் இது. இதோ, அவள் மாடியின் முகப்பில் (Balcony) நின்று கொண்டு அவன் வருவதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களுக்கு அவன் அழகாகத்தான் தெரிகிறான். அப்படியே, பார்வையை இங்கும் அங்கும் திருப்புகிறாள்.
அந்த வீதியில் உள்ள பெண்கள் அனைவரும் அவனையே பார்ப்பது போல அவளுக்குத் தெரிகிறது. அவள் இப்பொழுதுதான் இந்த வீட்டிற்கு, இந்த ஊருக்கு வந்துள்ளாள். அவனோ, இங்கேயே இருப்பவன். அவனுக்குத் தெரிந்தவர்கள்தாம் அந்த வீதியில் இருப்போரும்! அவனை அறிந்தவர்களின் புன்னகைக்கு புன்னகையைப் பதிலாகத் தருகிறான்.
அவ்வளவுதான், அவளுக்கு வந்துவிட்டது கோபம். ஊடல் குடி கொண்டு விட்டது. அவன் அவளைப் பார்த்துவிட்டான். ஆசையொடு கையை அசைக்கிறான். இவள் கண்டும் காணாது போல நடிக்கிறாள். இவன் பதைக்கிறான்.
மாடி நோக்கி எட்டுக் கால் பாய்ச்சலில் தாவுகிறான். அவன் அவளைத் தழுவிக் கொள்ள முனைகிறான். அவள் தடுக்கிறாள்.
அவன்: என்ன ஆயிற்று?
அவள்: பிறர் உண்ட எச்சில் இலையில் நான் உன்ணேன்…
அவன்: சரி உண்ணாதே. அதற்கும் என்னைத் தழுவிக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம்?
அவள்: அந்த எச்சில் இலை வேறு ஒன்றுமல்ல. உன் மார்புதான். இதோ, நீ இந்த வீதியில் நடந்து வந்த பொழுது பெண்கள் எல்லாரும் உன் மார்பினை மனத்தால் தழுவுகின்றனர். எனவே, உன்னை நான் தழுவேன்!
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு. – 1311; - புலவி நுணுக்கம்
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர் = பெண்கள் என்றழைக்கப்படும் எல்லாரும் உன்னை ஏதோ பொது மகன் போலக் கண்களாலே உண்கின்றனர்; பரத்த நின் மார்பு நண்ணேன் = எனவே, எச்சில் இலையைப் போன்ற பரந்த உன் மார்பினை நான் தழுவேன்.
பெண்கள் என்றழைக்கப்படும் எல்லாரும் உன்னை ஏதோ பொது மகன் போலக் கண்களாலே உண்கின்றனர். எனவே, எச்சில் இலையைப் போன்ற பரந்த உன் மார்பினை நான் தழுவேன்.
இந்த அம்பிற்கு எதிர் அம்பு விட்டால் வம்புதான்.
நான் வேண்டுமானல் மாறு வேடத்தில் வரட்டுமா என்றான் அப்பாவியாக!
பாவம் என்ன செய்வான் அவன்?
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios