top of page
Search

பேணாது பெண்விழைவான் ... 902, 901

28/05/2022 (456)

பெண்ணின் விழியசைவில் வீழ்ந்து கிடப்பதும் ஒருவனுக்கு பகை என்று சொல்கிறார் நம் பேராசான்.


அறம், பொருள், இன்பம் என்று அமைப்பை வைத்த வள்ளுவப் பெருமான் ‘இன்பம்’ வேண்டும் என்றுதான் சொல்கிறார். ஆனால், அதை முதன்மைப் படுத்தாதே என்று குறிப்பால் உணர்த்துகிறார்.


இந்த அதிகாரம் முழுமையும், ஆண்மை எது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும் ஆண்களுக்குச் சொன்னது!


கடமைகளைப் பேணாது, பெண்ணின் பின்னால் தன் ஆக்கத்தைச் செலவழிப்பவன் வெட்கித் தலைகுனிய நேரிடும் என்கிறார்.


சேலையில் முடிந்து கொள்ள பெண்களுக்கு ஆசை இருந்தாலும்கூட, அவளும் ஒரு நாள், உலகத்தார் தங்களை மதிக்க வேண்டும் என்றே நினைப்பாள். அப்போது, அவளும் அவனை இகழுவாள். அதுவும் தலைகுனிவாகவே மாறும்!


பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நாணாக நாணுத் தரும்.” --- குறள் 902; அதிகாரம் – பெண்வழிச்சேறல்


பேணாது பெண்விழைவான் ஆக்கம் = கடமையைப் பேணாது, பெண்மையை நோக்கியே தன் கவனம் முழுவதும் செலுத்தி தன் நேரத்தை வீணடிப்பவனின் செயல்; பெரியதோர் நாணாக நாணுத் தரும் = மிகவும் வெட்கித் தலை குனியுமாறு செய்யும்.


இன்பம் துய்க்க வேண்டி, இல்லாளையே சுற்றி, சுற்றி வருபவன் பெரிய செயல்களைச் செய்ய இயலாது. அந்த இளமைப் பருவம் என்பது பல வகையில் வினைகளை ஆற்றுவதற்கு உண்டான காலம். அப்போது, ஆக்கத்தை ஒரே நோக்கதிற்காகசெலுத்துவது, பல வகையில் பகிர்ந்து பயன் படுத்தாது பாயிலியே சுருண்டு கிடப்பதால் பல வாயில்கள் அடைபடும். பல வாய்கள் பின்னாளில் அவதூறு பேசும். வளர வேண்டியவர்கள் செய்யும் செயல் ‘அது’ மட்டும் அல்ல என்கிறார்.


‘அது’ போல, வீட்டிலேயே அடைந்திருந்து இருவரும் இன்பம் துய்த்து சில காலம் கழிந்தபின், இவனிடம் ஒன்றும் இல்லை என்று இல்லாள் அறிந்தபின் அவள் கேட்பது மணமுறிவு (விவாகரத்து)! நடைமுறையிலே, மணமுறிவிற்கு இது ஒரு பெரும் காரணியாக இருக்கிறது.


மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது.” --- குறள் 901; அதிகாரம் – பெண்வழிச்சேறல்


மனைவிழைவார் மாண்பயன் எய்தார் = இன்பம் ஒன்றையே விரும்பி இருப்பவர் பெரிய நிலையை அடைய மாட்டார்; வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது = முன்னேற நினைப்பவர்கள், செய்ய வேண்டியதைச் செய்யத் துடிப்பவர்கள் தனக்கு வேண்டாம் என்பதும் ‘அது’ தான்.


‘அதில்’ கவனம் வைக்காமல் கவனமாக இருக்கனும்!


இந்த இரண்டு பாட்டாலும், மனையை மட்டும் விழைதலால் வரும் குற்றங்களைச் சொல்வது.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )




7 views2 comments
Post: Blog2_Post
bottom of page