13/06/2022 (472)
‘அன்பின் விழையார்’, ‘பண்பில் மகளிர்’, ‘பொருட் பெண்டிர்’, ‘பொருட்பொருளார்’ என்ற சொல்லாடல்களை அடுத்து ‘பொதுநலத்தார்’ என்று பயன்படுத்துகிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
பொதுநலத்தார் என்பது வஞ்சப் புகழ்ச்சி அணி என்று நினைக்கிறேன். இந்தப் பொதுநலம் ‘புன்னலம்’ என்றார். அதாவது, இழிவான இன்பம். நலம் என்ற சொல்லுக்கு இன்பம் என்று பொருள் கொண்டு வரைவின் மகளிரை ‘பொதுநலத்தார்’ என்கிறார்.
அப்பாவாக இருந்தாலும் சரி, மகனாக இருந்தாலும் சரி, வரைவின் மகளிரைப் பொறுத்தமட்டில் ஒரே மாதிரிதான் என்பதைக் குறிக்க ‘பொதுநலத்தார்’ என்றார். இது வரைவின் மகளிரின் சுயநலத்தைக் குறிக்க பயன்படுத்தியுள்ளார்.
‘புத்திசாலிப் பிள்ளைங்க இதெல்லாம் செய்ய மாட்டாங்க’. நீங்க அந்தப் பக்கம் போவிங்களா என்ன? என்று வினவுவது போல மீண்டும் ஒரு குறள்.
“பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.” --- குறள் – 915; அதிகாரம் – வரைவின் மகளிர்
மதிநலத்தின் மாண்ட அறிவினவர் = எது சரி, எது தவறு என்று ஆராய்ந்து அறிவதிலே இன்பம் கொண்ட சிறந்த அறிவு கொண்டவர்கள், அதாவது ‘புத்திசாலிப் பிள்ளைங்க’; பொதுநலத்தார் புன்னலம் தோயார் = வரைவின் மகளிரின் இழிந்த இன்பத்தில் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்.
எது சரி, எது தவறு என்று ஆராய்ந்து அறிவதிலே இன்பம் கொண்ட சிறந்த அறிவு கொண்டவர்கள் அதாவது ‘புத்திசாலிப் பிள்ளைங்க’, வரைவின் மகளிரின் இழிந்த இன்பத்தில் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments