பேதை பெருங்கெழீஇ ... குறள் 816
09/01/2022 (318)
தீ நட்பின் முதல் குறளில் (811) அது வளர்வதைக் காட்டிலும் தேய்வது இனிது என்ற பொதுப் பண்பைக் கூறினார்.
அதைத் தொடர்ந்து வரும் இரு குறள்களில் (812, 813) ‘தனக்கு என்ன கிடைக்கும்’ என்று பார்ப்பவர்களை ஒரு குறியீடாகத் தெரிவித்தார். அந்த நட்பு இருந்தால் என்ன? போனால்தான் என்ன? என்று கேள்வியை அடுக்கிட்டு, அவர்கள் விலைமாந்தருக்கும், கள்வருக்கும் சமம் என்று உருவகப்படுத்தினார்.
மேலும், இரு குறள்களில் (814, 815), இன்னும் உங்களுக்கு பிடிபடவில்லையா என்று கேட்டு, சரியானத் தருணத்தில் கைவிட்டு விட்டால் அது தான் தீ நட்பு என்று அறிந்து கொள்ளுங்கள் என்று போட்டு உடைத்தார்.
அடுத்துவரும் மூன்று குறள்களில் (816,817,818), தீ நட்புக்கு பெயர் சூட்டுகிறார். அதாவது, பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்ற பட்டப் பெயர்களை அளிக்கிறார். ஒவ்வொன்றாகப் பார்கலாம்.
தீ நட்பை எடுத்த உடனே ‘பேதை’ என்று ஆரம்பித்து, அவர்களுடன் ஒட்டி உறவாடுவதைவிட தம்பி, அறிவுடையவர்களின் நொதுமலோ, பகையோ கோடி பெறும் என்கிறார். அவ்வளவு கடுப்பு வருகின்றது நம் பேராசானுக்கு.
பேதையோட சேர்ந்தால் நாமும் பேதைதான் என்று சொல்லமல் சொல்கிறார். ஏதம் கொண்டு ஊதியம் போக விடுவது பேதைமை என்று நமக்குத் தெரியும். அதாவது ‘சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது’ என்று குறள் 831ல் பார்த்தோம். இது நிற்க.
“பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.” --- குறள் 816; அதிகாரம் – தீ நட்பு
பேதை = அறிவில்லாதவன்; பெருங்கெழி நட்பின் = ரொம்ப நெருக்கமான நட்பைவிட; கெழிஇ = அளபெடை – ‘இ’ யைச் சேர்த்து இழுத்துச் சொல்லுகிறார்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் = அறிவுடையார்கள் தொடர்பு கொஞ்சம்கூட கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அது கூட ஒரு கோடிக்கு சமம்தான்.
இங்கே, ‘கோடி உறும்’ என்பதை பேதைகளின் நட்பை உதறுவதன் மூலம் வரும் என்பதாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.
முதலில் அதைவிடு, அடுத்ததை அப்புறம் பிடிக்கலாம் என்று ஒரு குழந்தைக்கு சொல்வதுபோல ரொம்ப அக்கறையோடச் சொல்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
விலகுவோம் தீ நட்பிலிருந்து. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘Toxic relationship’ என்கிறார்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
