26/02/2024 (1087)
அன்பிற்கினியவர்களுக்கு:
உயல் என்றால் தவிர்க்க வேண்டியன. உயல் ஆற்றா என்றால் தவிர்க்க வேண்டியதைச் செய்யாமல். உயல் பாலது என்றால் தவிர்க்க வேண்டிய தன்மையுடையது என்று பொருள். காண்க 22/02/2021, 07/04/2021.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. - 40; - அறன் வலியுறுத்தல்
செய்வதெல்லாம் அறமாகஇருக்கணும், தள்ளப் போட வேண்டியது, தவிர்க்க வேண்டியது ‘பழி’.
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும். - 437; – குற்றங்கடிதல்
செய்ய வேண்டியவற்றைச் செய்யாத கஞ்சனின் பொருள், தவிர்க்க வேண்டிய, அறமல்லாத செயல்கள் எவையும் செய்யாமலே அழியும். அஃதாவது, தானாகவே அழியும்.
இது நிற்க. நாம் அவளின் கண்களைப் பற்றிய கருத்துகளைப் பார்ப்போம்.
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. – 1174; - கண் விதுப்பு அழிதல்
பெயல் = பெய்வது - இங்கே அழுவது; உய்வு இல் = மீள முடியா; நீர் உலந்த = நீர் வற்றிய;
உண்கண் பெயல் ஆற்றா நீர் உலந்த = அவரைப் பார்த்த உடனே மயங்கி, எந்தக் கேள்வியும் கேட்காமல், அவரை அப்படியே விழுங்கிய இந்தக் கண்கள், அவர் இப்போது பிரிந்து சென்றுள்ளதை நினைத்து அழுது, அழுது இப்போது மேலும் அழ முடியாத அளவிற்குக் கண்ணீரும் வற்றி உலர்ந்து இருக்கின்றன; உயல் ஆற்றா = அப்போதே, அவரைச் சரியாக ஆய்ந்து தவிர்த்திருக்க வேண்டும்; உய்வில் நோய் என் கண் நிறுத்து = அதைச் செய்யாமல் என்னை மீள முடியாத இந்தக் காம நோயில் ஆழ்த்தியுள்ளன.
அவரைப் பார்த்த உடனே மயங்கி, எந்தக் கேள்வியும் கேட்காமல், அவரை அப்படியே விழுங்கிய இந்தக் கண்கள், அவர் இப்போது பிரிந்து சென்றுள்ளதை நினைத்து அழுது, அழுது இப்போது மேலும் அழ முடியாத அளவிற்குக் கண்ணீரும் வற்றி உலர்ந்து இருக்கின்றன. அப்போதே, அவரைச் சரியாக ஆய்ந்து தவிர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் என்னை மீள முடியாத இந்தக் காம நோயில் என்னை ஆழ்த்தியுள்ளன.
நான் என்ன செய்வேன்!
தொடர்வோம் நாளை. நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments