09/08/2023 (887)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
குறள் 835 இல் பேதைமை நிறைந்த செயல் ஏழுத் தலைமுறைகளையும் தாக்கும் வல்லமை பெற்றது என்றார்.
அடுத்து, பேதையின் பாதையைச் சொல்கிறார். அஃதாவது, அந்தப் பாதையில் செல்பவர்கள் பேதைகள் என்கிறார்.
செய்யும் முறைமை அறியாப் பேதைகளின் செயல்கள் பொய்த்துப் போகுமாம். அது மட்டுமா, அந்தச் செயல்களை யாரும் தொடரமுடியாதபடி, அதனை யாருமே சரி செய்ய முடியாத நிலையில் ஆழ்த்திவிடுவார்களாம். அதாவது சிக்கலை இடியாப்பச் சிக்கல் ஆக்கிவிடுவார்கள்!
அஃதாவது, ஒருவன் தனது நிலையையும், தம் மக்கள் நிலையையும், மாறிவரும் உலக நிலையையும் உள்வாங்காமல் போருக்குச் செல்வானானால், அந்தப் போரினை தொடர்வானானால், அவன் மட்டும் அழிவதல்ல, அவன் அந்த இனத்தையே பல தலைமுறைகளுக்கு அதன் கைகளைக் கட்டிப் போட்டனாவான். அவன் பேதையல்லாமல் வேறு யார் என்கிறார் நம் பேராசான்.
போர் என்பது செயல்களையும் குறிக்கும்.
“பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.” --- குறள் 836; அதிகாரம் – பேதைமை
கையறியாப் பேதை வினைமேற் கொளின் = மாறிவரும் தற்போதைய நிலையை அறியாமலும், தனது நிலையை ஆராயாமலும் இருக்கும் பேதை ஒரு செயலைச் செய்யத் துணிவானாயின்; பொய்படும் = அந்தச் செயல் பிழைத்துப் போகும். அஃதாவது தோல்வியில் முடியும்; ஒன்றோ = அது மட்டுமா?; புனை பூணும் = அந்தச் செயல் எவராலும் வரும் காலங்களில்கூடச் செய்ய இயலாதவாறு இறுக கட்டப்பட்டுவிடும். புனை = தளை.
மாறிவரும் தற்போதைய நிலையை அறியாமலும், தனது நிலையை ஆராயாமலும் இருக்கும் பேதை, ஒரு செயலைச் செய்யத் துணிவானாயின் அந்தச் செயல் பிழைத்துப் போகும். அஃதாவது தோல்வியில் முடியும்; அது மட்டுமா? அந்தச் செயல் எவராலும் வரும் காலங்களில்கூடச் செய்ய இயலாதவாறு இறுகக் கட்டப்பட்டுவிடும்.
அதைத்தான், ஏழு தலைமுறையும் அந்தப் பேதையின் செயலால் பாதிப்பு அடையும் என்ற குறிப்பினை முன்பே உணர்த்தினார்.
ஒவ்வொரு தருணமும் நமது செயல்களின் பாதையை ஆராய்ந்து கொண்டேச் செல்ல வேண்டும். “நான் யார் தெரியுமா, அந்தப் போரில் வென்றவன்; இந்தப் போரில் தெறிக்க விட்டவன்” என்பர். மாறிவரும் சூழ்நிலைகளை மனத்தில் கொள்ளாமல், முன் வைத்தக் காலை பின் வைக்க மாட்டேன் என்றால் அவன் தலைமைக்குக் கொஞ்சமும் சரியானவன் இல்லை. தனது சுய பிம்பம்தான் பெரியது என்று நினைத்து மற்றவர்களைப் பிணையாக்கி நடப்பவர்கள் பேதைகள் என்பதை எடுத்துச் சொல்கிறார். வரலாற்று நெடுகிலும் பல உதாரணங்கள் இரணங்களாக இருப்பதை நாளும் பார்க்கிறோம். இது நிற்க.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Commenti