13/10/2022 (591)
காமத்துப் பாலில் இரண்டு இயல்கள் இருக்கின்றன. ஒன்று களவியல், மற்றொன்று கற்பியல்.
களவியலில் ஏழு அதிகாரங்கள். அவையாவன:
109. தகை அணங்கு உறுத்தல்;
110. குறிப்பு அறிதல்;
111. புணர்ச்சி மகிழ்தல்;
112. நலம் புனைந்து உரைத்தல்;
113. காதல் சிறப்பு உரைத்தல்;
114. நாணுத் துறவு உரைத்தல்; மற்றும்
115. அலர் அறிவுறுத்தல்.
அவளின் அழகு அவனைத்தாக்குவதில் தொடங்குகிறது களவியல். அதாவது: ‘தகை அணங்கு உறுத்தல்’; பின்னர் இருவரிடமும் ஏற்படும் மாற்றங்களை குறிப்பால் உணர்கிறார்கள் – குறிப்பு அறிவுறுத்தல்; அதன் பின் கூடி மகிழ்கிறார்கள் -புணர்ச்சி மகிழ்தல்; பின் கற்பனை சிறகை தட்டி விடுகிறார்கள் – நலம் புனைந்து உரைத்தல்; காதலின் சிறப்புகளை எண்ணி மகிழ்கிறார்கள் – காதல் சிறப்பு உரைத்தல்; அவர்களின் களவு வாழ்க்கை இரு வீட்டாருக்கும் தெரியவர அவர்கள் சந்திப்பது தடைபடுகிறது. அவன் தன் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்பதை ஊருக்குள் பரப்புகிறான் – நாணுத் துறவு உரைத்தல்; இதனால், ஊரெங்க்கும் ஏளனமும், கிண்டலும் எழ அவர்கள் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள் – அலர் அறிவுறுத்தல்.
களவியலில் இருந்து கற்பு வாழ்க்கைக்கு மாறுவதற்கு மூன்று வழிகள் இருக்கு.
1. பெற்றோர்களின் சம்மதம்;
2. நாணத்தைவிட்டு அவன் செய்யும் செய்கைகளால் ஊரே பேசுவதால் அதனை தடுக்கும் விதமாக பெற்றோர்கள் சம்மதிப்பது; அடுத்து
3. அப்படியும் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால் ‘ஓடிப் போவது’. அதனை சங்க காலத்தில் ‘உடன் போக்கு’ என்றார்கள்.
களவு வழி கற்புதான் அந்தக் காலத்தில் இருந்திருக்கும். அந்தக் களவில் இங்கொன்றும், அங்கொன்றுமாக ஏமாற்றங்கள், நம்பிக்கை இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதனால்தான் தொல்காப்பியப் பெருமான் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்:
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” --- கற்பியல் - 4; தொல்காப்பியம்
கரணம் யாத்தனர் – முறைகளை வகுத்தனர்
சமுகவியலாளர்கள் சொல்வது என்னவென்றால்: “அந்தக் காலம் தாய்வழிச் சமூகமாக இருந்தது. அப்போது, இது போன்ற திருமணச் சடங்குகள் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கவில்லை. பெண் தனக்கான ஆணைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் முழுவதுமாகப் பெற்றிருந்தாள்.”
“அதன்பின், உடமைகளற்ற சமுதாயமாக இருந்த இனக்குழுக்கள் தம்மை விரிவு படுத்திக் கொள்ள, ஆக உயரிய உடைமையான தம் பெண்களை பிற குழுவில் இணைத்து வைப்பது என்பது தொடங்கியிருக்கலாம். அங்கேதான் பெண்ணின் உரிமை, குடும்பத்தின் உடைமையாகி விட்டது.” என்கிறார்கள்.
எப்படியோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பது மிகப் பெரிய உண்மை.
நாளை குறளைத் தொடரலாம் என்றார் ஆசிரியர்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்

Comments