பெருங்கொடையான் ... 526
22/12/2022 (658)
பணிவு என்பது உடலின் மொழி. அது இனிமையாக இருக்க வேண்டும். அதாவ்து அதுவும் இன்சொல்லாக இருக்க வேண்டும்.
இனிமைக்குத் துணை அன்பு;
அன்பிற்கு எதிர் வெறுப்பு;
வெறுப்புக்கு மாற்றாந்தாய் கோபம்.
ஆகையால், கோபத்தை முதலில் கொல்ல வேண்டும். தலைமையில் இருப்போருக்கும், தலைமைக்கு வர வேண்டும் என்று முயல்வோருக்கும் இது மிக, மிக அவசியம்.
பதினென் சித்தர்களில் ஒருவர் இடைக்காடர். சித்தியும், முக்தியும் கிடைக்க வேண்டுமா அதற்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறார். (சித்தி என்பது இம்மை; முக்தி என்பது மறுமை. அதாவது, வாழும் போதும், வாழ்க்கைக்குப் பிறகும்)
“...மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே
முக்தி வாய்த்தது என்று எண்ணடா தாண்டவக்கோனே
சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே
எல்லாம் சித்தி என்று எண்ணடா தாண்டவக்கோனே ...” --- இடைக்காடர் பெருமான்
சரி, இதெல்லாம் இப்ப எதற்கு என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுமை.
கொடுத்தலும், இன் சொலும் இருந்தால் சுற்றத்தால் சூழப்படுவோம் என்பதை குறள் 525ல் பார்த்தோம்.
கொடுப்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று அடுத்தக் குறளில் சொல்கிறார். அதாவது, கொடுப்பவன் பெருங்கொடையாளியாகக் கூட இருக்கலாமாம். ஆனால் அவனும் கோபத்தை பேணக்கூடாதாம்.
“அடிக்கிற கைதான் அணைக்கும்” என்று சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது! அப்படி செய்தால் “இனிக்கிற வாழ்வே கசக்கும்”!
நாம் குறளுக்கு வருவோம்.
“பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்தில் இல்.” --- குறள் 526; அதிகாரம் – சுற்றந்தழால்
பெருங்கொடையான் வெகுளி பேணான் = பெரும் கொடையாளியாக இருப்பவன் கோபத்தைத் தவிர்ப்பானாயின்; அவனின் மருங்கு உடையார் மாநிலத்தில் இல் = அவனைப்போல சுற்றம் உடையவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது.
பெரும் கொடையாளியாக இருப்பவன் கோபத்தைத் தவிர்ப்பானாயின், அவனைப்போல சுற்றம் உடையவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது.
மருங்கு என்றால் ‘சுற்றம்’ என்றும் ‘இடை’ என்றும் பொருள்படும்.
“...செப்பழ குடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்...” --- கந்தர் சஷ்டி கவசம்; தேவராய சுவாமிகள்
துவண்ட மருங்கில் = சுருங்கிய இடையில்.
இது நிற்க.
சினத்தைத் தவிர்ப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
