பெருமை உடையவர் ... 975, 26
21/08/2022 (540)
“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.” --- குறள் 26; அதிகாரம் – நீத்தார் பெருமை
செயற்கரிய செய்வார் பெரியர் = பெரிய விஷயங்களை செய்றவங்க பெரியார்; செயற்கரிய செய்கலா தார் சிறியர் = பெரிய விஷயங்களை தவிர்ப்பவர்கள் சிறியர்.
மேலே கண்ட குறள் நாம் ஏற்கனவே பார்த்த குறள்தான். காண்க 09/08/2021 (167).
பல்வேறு சூழல்கள் அழுத்தினாலும், அதன் வழி செல்லாமல், எது குடிக்கு நன்மை பயக்குமோ அதனைச் செய்பவர்கள் பெருமை உடையவர்கள்.
அதுவும் எப்படி செய்வார்கள் என்றால், அந்தச் செயலை எப்படிச் செய்ய வேண்டுமோ அந்த முறையிலேதான் செய்வார்களாம்.
எப்படியாவது வெற்றி பெறுவது என்பதல்ல இலக்கு. அந்த வெற்றியும், அறம் சார்ந்த வழியில் இருக்க வேண்டும். அதை நெறி அறிந்து செய்வார்களாம். அப்படிச் செய்தால்தான் பெருமை என்கிறார் நம் பேராசான்.
“பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.” --- குறள் 975; அதிகாரம் – பெருமை
பெருமை உடையவர் = பெருமை உடையவர்கள்; அருமை உடைய செயல் = செயற்கரிய செயல்களை; ஆற்றின் ஆற்றுவார் = நெறியறிந்து செய்வார்கள்.
பெருமை உடையவர்கள், செயற்கரிய செயல்களை நெறியறிந்து செய்வார்கள்.
‘செயற்கரிய’ என்றால் வறியன் ஆகிவிட்டாலும், வலிமை குன்றி இருந்தாலும் அதனால் சலிக்காமல் எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி செய்வார்கள்.
‘ஆற்றின் ஆற்றுவார்’ என்பது அதைத்தான் குறிக்கிறது என் கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
