top of page
Search

பெரும்பொருளால் ... 732, 731

Writer's picture: Mathivanan DakshinamoorthiMathivanan Dakshinamoorthi

11/06/2023 (829)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

பொருட்பாலில், இரண்டு இயல்கள். அரசியல், அங்கவியல் என்பன நமக்குத் தெரிந்ததே. அங்கவியலில், அரசின் அங்கங்களுக்குத் தேவையானவற்றைச் சொல்லிக் கொண்டுவருகிறார்.


அங்கங்களுள் முக்கியமான ஒன்றான அமைச்சருக்குத் தேவையானவைகளை, அமைச்சு என்கிற 64 ஆவது அதிகாரம் தொடங்கி அவையஞ்சாமை என்கிற 73 ஆவது அதிகாரம்வரை, சொன்னார்.

அடுத்து, நாடு (74 ஆவது), அரண் (75 ஆவது) என்ற இரண்டு அங்கங்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்கிறார்.


நாட்டின் வரையறையை (definition) முதல் குறளிலிலேயேச் சொன்னார் என்பதை நாம் முன்பு ஒரு முறை பார்த்துள்ளோம். காண்க 10/01/2023 (677). மீள்பார்வைக்காக:


தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.” --- குறள் 731; அதிகாரம் – நாடு

மதிப்பு குன்றாதப் பொருட்களைச் செய்வோரும், விளைவிப்போர்களும், அற உணர்வோடு செயல்களைச் செய்வோரும், கேடு இல்லாதச் செல்வத்தைக் கொண்டவர்களும் சேர்ந்தால், அதுதான் நாடு.


நாடு என்பது நிலப்பரப்பல்ல என்பது கவனிக்கத் தக்கது.


மேலும், “Montevideo Convention on the Rights and Duties of States” என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போதைய உலக வரையறையையும் பார்த்தோம். காண்க 10/01/2023 (677). இது நிற்க.


நாடு என்றால் அதில் வளமை இருத்தல் வேண்டும். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? என்பதுபோல இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, அதில் கேடுகள் மலிந்திருக்கக் கூடாது.


சிறு பிள்ளை செய்த வேளாண்மை விளைந்தாலும் வீடு வந்து சேராது.” என்று ஒரு பழமொழி, இலங்கைத் தமிழ் உறவுகளிடம் புழக்கத்திலும், அனுபவத்திலும் ஆழமாகப் பதிந்துள்ளது. முதிர்ந்தத் தலைமையில்லாமல், இளையவர்களின் விளைச்சல் வீணாகிப் போனதுதான் மிச்சம். அது மட்டுமல்ல, “விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை” என்பதையும், அந்த இளைஞர்கள் மறந்ததும் காலக் கொடுமை.


அதாவது, ஒரு நாடு என்றால் என்னதான் வளங்கள் கொட்டிக் கிடந்தாலும், கேடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார் நம் பேராசான்.

பெட்பு = விருப்பு. பெட்டக்க என்றால் விரும்பத்தக்க என்று பொருளாம். இதில் இருந்துதான் “Pet” எனபது வந்ததோ? சரி, நாம் குறளைப் பார்ப்போம்.


பெரும்பொருளால் பெட்டக்க தாகி அரும்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு.” --- குறள் 732; அதிகாரம் – நாடு


பெரும் பொருளால் பெட்டக்கது ஆகி = வளங்களின் மிகுதியால், செல்வச் செழிப்பால், எல்லாராலும் விரும்பத் தக்கது ஆகி; அரும்கேட்டால் = கேடுகள் இல்லாமல்; ஆற்ற விளைவது நாடு = மேலும் வளங்களைப் பெருக்குவது நாடு.


வளங்களின் மிகுதியால், செல்வச் செழிப்பால், எல்லாராலும் விரும்பத்தக்கது ஆகி, கேடுகள் இல்லாமல்,மேலும் வளங்களைப் பெருக்குவது நாடு.


வளங்கள் சேர்ந்தாலே சுரண்டல்களும் வரும் என்பதைத் தெரிந்தே இந்தக் குறளை வைத்துள்ளார் என நினைக்கிறேன்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page