11/05/2023 (798)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
முதலில் நாம் குறளைப் பார்ப்போம்.
“பொருள்கருவி காலம் வினைஇடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.” --- குறள் 675; அதிகாரம் – வினை செயல்வகை
மேலோட்டாமாகப் பார்த்தால்:
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் = பொருள், கருவி, காலம், செயல், இடம் ஆகிய ஐந்தினையும்; இருள்தீர எண்ணிச் செயல் = மயக்கமற, அதாவது தெளிவாக, எண்ணிச் செய்க.
பொருள், கருவி, காலம், செயல், இடம் ஆகிய ஐந்தினையும், மயக்கமற, அதாவது தெளிவாக, எண்ணிச் செய்க.
அதாவது, ஒரு செயலுக்கு வேண்டிய எல்லாக் காரணிகளையும் அடுக்கிவிட்டார்.
ஆனால், இந்தக் குறளுக்கு மணக்குடவப் பெருமானும், பரிமேலழகப் பெருமானும் ஒரே வழியில்தான் விரிக்கிறார்கள். அதாவது, ஐந்து இல்லை. பத்து இருக்கிறது என்கிறார்கள். அது எப்படி?
நம் பேராசான் சொன்ன ஐந்தினுள், ஒவ்வொன்றிலும், இரண்டு இரண்டு வகை என்று விரிக்கிறார்கள்.
பொருள் என்றால் அழிக்கும் பொருள், பெரும் பொருள்;
கருவி என்றால் தனக்கு உள்ள படை, மாற்றானுக்கு உள்ள படை;
காலம் என்றால் தனக்கான காலம், மாற்றானுக்கான காலம்;
வினை என்றால் தான் செய்யும் வினை, மாற்றான் செய்யும் வினை;
இடம் என்றால் தனக்குண்டான இடம், மாற்றானுக்கு ஏற்ற இடம் என்று இரண்டிரண்டாக விரித்துள்ளார்கள்.
இவை அனைத்தையும், இருள்தீர எண்ணிச் செய்வதுதான் வினை செயல்வகை என்கிறார்கள்.
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், இந்த வினைச் செயல்வகை அதிகாரம் குறிப்பது, மிகச்சாதாரணமான வினைகளை அல்ல.
சரி, இது அன்றாட வாழ்க்கையில் பயன்படாதா? பயன்படும் என்றால் பயன்படுத்துவோம் அவ்வளவே.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

Comments