09/12/2023 (1008)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஒய்வெடுக்கும் பருவத்தில் கைக்கொள்ள வேண்டியது அருள். அவ்வாறில்லாமல் அனைவருடனும், குறிப்பாக வருங்கால சந்ததியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு கண்டவற்றையும் செய்து கொண்டிருப்பவர்கள், தங்கள் கடமையை மறந்தவர்களாவர். அது மட்டுமல்ல, தாங்கள் வாழும் வாழ்விற்கே ஒரு பொருள் இல்லாமலும் போகும் என்கிறார் பேராசான்.
பொச்சாவாமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறள்களை நாம் சிந்தித்துள்ளோம். கவனப்படுத்திக் கொள்ளல் நன்று.
தாங்கள் இருக்கும் பருவத்தை மறந்து, தங்களை முன்னிறுத்தும் முனைப்பினால், தாம் செய்ய வேண்டிய கடமைகளை மறப்பது பொச்சாப்பு. எனவே அவர் பொச்சாந்தார்!
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார். – 246; அருளுடைமை
பொருள் = வாழ்வின் பயன்; அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் = அருளை ஒழுகாமல், அனைத்து உயிர்களின் முன்னேற்றத்தை நாடாமல், தாம்தாம் அனைத்தையும் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் தாம் பறித்துக் கொண்டு செயல்படுபவர்; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் = அவர்கள் வாழ்ந்ததற்கான பொருளையும் இழந்து தம் கடமைகளையும் மறந்தவர் ஆவார் என்பர் சான்றோர்.
அருளை ஒழுகாமல், அனைத்து உயிர்களின் முன்னேற்றத்தை நாடாமல், தாம்தாம் அனைத்தையும் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் தான் பறித்துக் கொண்டு செயல்படுபவர், அவர்கள் வாழ்ந்ததற்கான பொருளையும் இழந்து தம் கடமைகளை மறந்தவர் ஆவர் என்பர் சான்றோர்.
அஃதாவது, அவர்கள் அவ்வளவு காலம் வாழ்ந்தும் என்ன பயன்? வாழ்ந்ததற்கும் பயன் இல்லை; தம் கடமையை மறந்த அவர்களை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவும் முடியாது. அவர்கள் வீண். அவ்வளவே.
பரிமேலழகப் பெருமான் என்ன சொல்கிறார் என்றால் நீ அருள் செலுத்தவில்லையா அப்போதே நீ கொடுமைகளைச் செய்பவனாகிறாய் என்கிறார். பொருள் என்ற சொல்லுக்கு அறம் என்று பொருள் காண்கிறார். நீ அற வழியை இழக்கிறாய் என்கிறார். அதனால் வரும், பிறவித் துன்பம் மூன்றனையும் நீ மறக்கிறாய். இந்த உண்மைப் பொருளை யாரும் மறக்க மாட்டார்கள். எனவே அருள் பாதையில் இருந்து விலக மாட்டார்கள் என்றும் முடிக்கிறார்.
பிறவித் துன்பம்: தம் செயலால் வருவன; பிறரால் வருவன; ஏன் என்று புரியாமல் நிகழ்வன (தெய்வதால் நிகழ்வன என்றும் கூறுவர்).
பரிமேலழகப் பெருமான்:
உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர்.
உறுதிப்பொருள் = அறம்; துன்புறுதல் = பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Yorumlar