17/08/2022 (536)
எச்சரிக்கை: நீண்ட பதிவு.
“இடைவிடாத வேலைகளுக்கு மத்தியில் மனம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கை என்னுடையது” என்கிறார் மகாத்மா காந்தியடிகள்.
வேலை, வேலை, வேலை இதுதான் தாரக மந்திரம்.
இதைத்தான் Dignity of Labour என்கிறார்கள்.
கண்ணியம் எதில் இருக்கிறது என்றால் நாம் செய்யும் தொழிலில் இருக்கிறது. அது எந்தத் தொழிலாக வேண்டுமானாலும் இருக்கலாம். யாரையும் சார்ந்து இல்லாமல் உழைத்து வாழ்வது என்பது போற்றத்தக்கது.
தெரு பெருக்கலாம்; நாற்று நடலாம்; நாட்டை ஆளலாம். அதற்குரிய பொருள், கூலி அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
வறுமை ஏன் ஏற்படுகிறது என்று இப்போது ஓய்விலிருக்கும் முன்னாள் போப்பாண்டவர் பெனெடிக்ட் (Pope Benedict XVI) இவ்வாறு சொல்கிறார்:
“ஒருவர் செய்யும் வேலையின் கண்ணியத்தை அடுத்தவர்கள் மதிக்காதது, போற்றாதது வறுமைக்கு முதல் காரணம்” என்கிறார். “அது எதனால் வருகிறது என்றால் போதுமான அளவு வேலைகள் இல்லாமல் இருப்பதாலும், அவர்கள் செய்யும் வேலைக்கு குறைந்த மதிப்பை நாம் தருவதாலும்தான் வறுமை ஏற்படுகிறது” என்கிறார். “அவர்கள் பெறும் கூலியில் இருந்துதான் அவர்களுக்கான உரிமை பிறக்கிறது.” என்று மேலும் சொல்கிறார்.
“In many cases, poverty results from a violation of the dignity of human work, either because work opportunities are limited (through unemployment or underemployment), or "because a low value is put on work and the rights that flow from it, especially the right to a just wage and to the personal security of the worker and his or her family." (Pope Benedict XVI, Charity in Truth [Caritas in Veritate], no. 63)
ஒருவனை கைத்தூக்கிவிடும் நிலையில் இருப்பவர்கள் தானம் செய்ய வேண்டாம், தவம் செய்ய வேண்டாம். உழைப்பவர்களுக்கு உரிய ஊதியத்தை கண்ணியமாக கொடுத்தாலே போதும்.
“இதை விட குறைவான பணத்துக்கு வேலை செய்ய பத்து பேர் வருவாங்க. நீ கிளம்பு” என்ற நினைத்தால் நாட்டின் வறுமைக்கு நாமும் அடி கோலுகிறோம் என்று பொருள்.
சரி, இதெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்கிறீர்கள். இதோ வருகிறேன்.
அதாவது, நாமெல்லாம் பிறப்பிலே ஒன்று போலவே பிறக்கிறோம். ஆனால், செய்யும் தொழில்கள் அவர், அவர் திறமையால், உழைப்பால், வாய்ப்புகளால் வேறுபடுகிறது. இருப்பினும் ஒவ்வொரு தொழிலும் முக்கியமானது, நம் குடிக்குத் தேவையானது. இந்தத் தொழில் மட்டம், அந்தத் தொழில் உயர்வு என்பதல்ல.
“எல்லாத் தொழிலும் கண்ணியம் மிக்கதே, போற்றத்தக்கதே. ஒன்று சிறப்பு, இன்னொன்று மட்டம் என்று நினைக்காதீர்கள்” என்று நான் சொல்லவில்லை. நம் பேராசான் சொல்கிறார்.
போப்பாண்டவப் பெருமான் தற்காலத்தில் சொன்னதை அழகாக அக்காலத்திலேயே சொல்லிச் சென்றிருக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
“பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமை யான்.” --- குறள் 972; அதிகாரம் – பெருமை
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் = பிறப்பு என்பது இயற்கையான, இயல்பான ஒன்று. அது அனைவருக்கும் ஒரு போலத்தான்;
சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான் = அவர், அவர்களுக்கு அமையும் தொழில் வெவ்வேறாக இருந்தாலும் அதிலும் உயர்வு, தாழ்வு இல்லை. அதையும் ஒன்றாகவே மதிக்க வேண்டும்.
பிறப்பு என்பது இயற்கையான, இயல்பான ஒன்று. அது அனைவருக்கும் ஒரு போலத்தான். அவர், அவர்களுக்கு அமையும் தொழில் வெவ்வேறாக இருந்தாலும் அதிலும் உயர்வு, தாழ்வு இல்லை. அதையும் ஒன்றாகவே மதிக்க வேண்டும். அது தான் நம் குடிக்கு பெருமை சேர்க்கும்.
இந்தக் குறளுக்கு, தற்கால அறிஞர் பெருமக்கள் பலவாறு பொருள் சொல்கிறார்கள். குறளுக்கு பொருள் காணும்போது அமைப்பு முறையையும் சார்ந்து பொருள் கொள்ள வேண்டும் என்று என் ஆசிரியர் அழுத்திச் சொன்னார்.
மணக்குடவப் பெருமான், பரிமேலழகப் பெருந்தகை, அறிஞர் மு.வ அவர்களின் உரைகளை நோக்குவது நலம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
While USA and many western countries follow “எல்லாத் தொழிலும் கண்ணியம் மிக்கதே, போற்றத்தக்கதே. Unfortunately we indians claim to be supplier of culture to the whole world do not follow this .This attitude should change.