top of page
Search

பிறர்பழியும் தம்பழி ... 1015, 1014, 27/05/2024

Writer: Mathivanan DakshinamoorthiMathivanan Dakshinamoorthi

27/05/2024 (1178)

அன்பிற்கினியவர்களுக்கு:

நம் பேராசான் ஒரு நகை வடிவமைப்பாளர்! (Ornament designer)

யார் யார் என்னென்ன நகைகளைஅணிந்து கொண்டு சிறப்பு எய்தலாம் என்று அங்காங்கே சொல்லுவார்.

 

எல்லார்க்கும் பொதுவான அணி (நகை) பணிவும், இன்சொல்லும் என்றார் குறள் 95 இல். காண்க 02/08/2022.

 

பெருமை வரும்; சிறுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான், வாழ்க்கை ஒன்றுதான்! எனவே, சான்றோர்க்கு அணியாவது நடுவுநிலைமைத் தவறாமல் இருப்பது என்றார் குறள் 115 மற்றும் 118 இல். காண்க 28/09/2023, 30/09/2023.

 

குறிப்பறிபவன் இந்த உலகிற்கே அணியென்றார் குறள் 701 இல். காண்க 08/09/2021.

 

பிணிகள் இல்லாதிருத்தல், செல்வம் நிறைந்திருத்தல், நல்ல விளைச்சல், மகிழ்ச்சி, பாதுகாப்பு என்ற ஐந்தும் ஒரு நாட்டிற்கு அணி என்றார் குறள் குறள் 738 இல். காண்க 16/06/2023.

 

ஆனால், எந்தப் பாடலையும் “அணி” என்று சிறப்பித்து ஆரம்பிக்கவில்லை.  அதுமட்டுமன்று. அந்த அணியை அணிந்து கொள்ளவில்லை என்றால் பிணி பிடித்து ஆட்டும் என்றும் சொல்வது நாணுடைமையில் மட்டுமே! அஃதாவது, பிணி பிடித்துக் கொண்டால் விடாது. ஆகையினால் கவனம் தேவை.

 

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்

பிணியன்றோ பீடு நடை. – 1014; - நாணுடைமை

 

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு = அணிந்து கொள்ள வேண்டிய அணி சான்றோர்க்கு எதுவென்றால் அது நாணுடைமைதான்; அஃதின்றேல் பிணியன்றோ பீடு நடை = நாணுடைமை என்னும் அணியை அணிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களின் செம்மாந்த நடை சீரழியும்.

 

அணிந்து கொள்ள வேண்டிய அணி சான்றோர்க்கு எதுவென்றால் அது நாணுடைமைதான். கவனிக்க: நாணுடைமை என்னும் அணியை அணிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களின் செம்மாந்த நடை சீரழியும்.

 

அடுத்து வரும் குறள் சிந்திக்க வைக்கிறது.

 

Act of commission or omission குறித்து முன்பே சிந்தித்துள்ளோம். காண்க 17/04/2022, 17/12/2023.  அஃதாவது, Act of Commission என்றால் தவறாகச் செய்து அதனால் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவது; Act of Omission செய்ய வேண்டிய ஒன்றைச் செய்யாமல் இருந்ததனால் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவது. இதனை கவனித்தில் வைக்க.

 

நாணுடைமை என்பது பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு ஏற்பட்ட பழி போல நாணுவது என்கிறார்.

 

தமக்கு வரும் பழிக்கு அஞ்சுவது சரி; பிறர்க்கு வரும் பழிக்கும் ஏன் மற்றவர் நாண வேண்டும்?

 

“ச்சே, ஒரு வேளை நான் அவருக்கு முன்னரே சொல்லித் தடுத்திருந்தால் இப்பொழுது அவர் சுமக்கும் அந்தப் பழி வராமலே இருந்திருக்கும்.” என்று நாணுவார்கள் போலும். – Act of omission

 

தமக்கு வரும் பழிக்கு மட்டுமல்ல, பிறர்க்கும் பழி வராமல் காக்கும் வகையில் தடுப்பரணாக இல்லாமல் போனோமே என்றும் வருந்துவதும் நாணுடைமை என்று சொல்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்தியன் திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகள்:

 

கண்ணே உன் உழியால் பிறர்க்கழுதால்

கண்ணீரும் ஆனந்தம், ஆனந்தம் …

பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டுக் குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்தப் பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை … கவிப்பேரரசு வைரமுத்து, இந்தியன் 1996.

நம் விழியால் பிறர்க்கழுதால் அதுவும் நாணுடைமை.

 

பிறர்பழியும் தம்பழி போல் நாணுவார் நாணுக்

குறைபதி என்னும் உலகு. – 1015; நாணுடைமை

 

உறை பதி = உறைவிடம், தங்கும் இடம்;

பிறர் பழியும் தம்பழி போல் நாணுவார் = பிறர்க்கு வந்த பழியினைத் தடுக்க வழி இல்லாமல் போனோமே என்று எண்ணி அப்பழி தம் மீது விழுந்த பழியே என்பதனைப் போல அஞ்சுபவர்களை; உலகு நாணுக்கு உறை பதி என்னும் = இந்த உலகம் நாணுடைமைக்கு உறைவிடம் என்று சொல்லும்.

 

பிறர்க்கு வந்த பழியினைத் தடுக்க வழி இல்லாமல் போனோமே என்று எண்ணி அப்பழி தம் மீது விழுந்த பழியே என்பதனைப் போல அஞ்சுபவர்களை இந்த உலகம் நாணுடைமைக்கு உறைவிடம் என்று சொல்லும்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





 

Comentários


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page