top of page
Search

பிறை எனும் நுதலவள் ... கம்பராமாயணம்

05/04/2023 (762)

எச்சரிக்கை – நீண்ட பதிவு.


உணர்வா அறிவா என்று வந்துவிட்டால் உணர்வுதான் பெரும்பாலும் வெல்லும்.


கம்பராமயணத்தில் “... அண்ணலும் நோக்கினான்; அவளும் நோகினாள்” காட்சி நமக்குத் தெரியும். மீள்பார்வைக்காக காண்க 16/09/2021 (205). அதனைத் தொடர்ந்து ...


சரி, இருவரும் பார்த்தாகிவிட்டது. சீதா பிராட்டிக்கு இராமனின் மேல் காதல் உணர்ச்சி மேலோங்கி விட்டது.


சீதாதேவிக்குத் தெரியும், அவளின் தந்தை அவளுக்கு கணவனாக வர வேண்டும் என்பவருக்கு ஒரு போட்டி வைத்துள்ளார். அந்தப் போட்டியில் யார் முதலில் வெல்கிறார்களோ அவரைத்தான் சீதாதேவி மணம் முடிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது, இராமனை விரும்பியது சரியா?


இராமனே வில்லை முறித்தால் பரவாயில்லை! வேறு யாராவது முறித்தால்?


முறித்தால் நிலை என்ன ஆகும்?


இது, அவளது அறிவு அவளைப் பார்த்துக் கேட்பது. அவளிடம் பதில் இல்லை. என்ன சொல்வாள்?


சீதா: ம்ம்.. இல்லை, ம்ம் ... இல்லை இல்லை; அவர்தான் வில்லை முறிப்பார்; நிச்சயம் முறிப்பார்; எப்படியும் அவர் வில்லை முறித்து ...


மனசாட்சி: சீதையே நில். அதை நீ எப்படி உறுதியாகச் சொல்கிறாய்?


சீதா: பெரும் மௌனம் ...


அதாவது, அவள் செய்வது சரியல்ல என்று அறிவு சொல்கிறது. என்றாலும் அவளால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


இதைக் காட்டவேண்டும் கம்ப பெருமானுக்கு. இதற்கு ஒரு காட்சியைச் சித்தரிக்கிறார்.


அதாவது, யானைப் பாகன் ஒரு யானையை அடக்க வேண்டும் என்றால் அங்குசத்தால் அதன் காதில் ஓங்கி ஒரு குத்து குத்தி இழுத்தால் யானை அடங்கிவிடும்.


அங்குசம் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அது கூரிய முனையோடு வளைந்து இருக்கும். அதனைக் காதில் குத்தி இழுத்தால், காது அதில் மாட்டிக் கொள்ளும். வலி பொறுக்க முடியாமல் அந்த யானை ஒரு நிலைக்கு வரும்.


அங்குசம்தான் மன உறுதி. மதம் பிடித்த யானைதான் அதீத காதல் உணர்ச்சி.


இங்கே என்ன ஆனது என்றால், அந்த அங்குசத்தை மாட்டி இழுத்தபோது வளைந்திருக்கும் அந்த அங்குசத்தின் முனை நிமிர்ந்து விட்டதாம். மத யானை அடங்காமல் போயே போய்விட்டது. அதாவது அதீத காதல் எனும் உணர்ச்சிதான் வென்றது. அங்குசம் எனும் அறிவு தோற்றது என்கிறார் கம்பபிரான்.


பிறை எனும் நுதலவள் பெண்மை என்படும்

நறை கமழ் அலங்கலான் நயன கோசரம்

மறைதலம் மனம் எனும் மத்த யானையின்

நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே!” --- --- பாடல் 519; மிதிலைக் காட்சிப் படலம்; பாலகாண்டம்; கம்பராமாயணம்

பிறை எனும் நுதலவள் பெண்மை என்படும் = பிறைச் சந்திரனைப் போல எடுப்பான நெற்றியை உடைய சீதா என்ன செய்வாள் (பாவம் அவள்);


நறை கமழ் அலங்கலான் நயன கோசரம்மறைதலம் = நல்ல நறுமனம் வீசும் மாலைகளை அணிந்திருந்த இராமன் அவள் கண்களின் பார்வையில் இருந்து மறைந்து விட்டான்;

(ஆனாலும், அவள் மனம் அவனைப் பின் தொடர்கிறதே? என் செய்வாள்?)


மனம் எனும் மத்த யானையின்நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே = மனம் எனும் மத யானையைப் பிடித்து நிற்க வைக்கும் உறுதி எனும் அங்குசம் உறுதியாக நிற்காமல் நிமிர்ந்து போனதே!


என்ன அழகான ஒரு கற்பனை!


அதனால்தான், காதலுக்கு கண் இல்லை என்பது!

இந்தக் கதையில் இராமனே வில்லை முறித்து சீதையை மணந்துவிட்டார். சுபம்.


ஆனால், பலரின் நிலை அவ்வாறா இருக்கிறது?


சீவக சிந்தாமணியில் உள்ள பாடலில் ஒரு வரி வருகிறது:


காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா ...” பாடல் 1632


காதன் மிக்கூழி = காதல் மிக அதிகமாகும்போது

அதிகமானக் காதல் = மோகம், காமம்


மோகம், காமம் என்று நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக “காதல் அதிகமாகும்போது” என்பார்கள். இவ்வாறு சொல்வதை தமிழில் ‘இடக்கரடக்கல்’ என்பார்கள்.


காதல் அதிகமானால் மோகம். மோகம் அதிகமானால் காமம் ஆகிவிடுகிறது. அங்கே, அறிவு கை கொடுக்காது! இதை நம் பரிமேலழகப் பெருமான் ஒரு குறளுக்கு எடுத்துக்காட்டாக வைக்கிறார். அதைப் பற்றி நாளை பேசுவோம்.

அதீத காதல் என்பதில் பேராசை, கடும் பற்று போன்றவையும் அடங்கும்!


மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு...” என்று நம் மகாகவி பாரதி கூறுகிறார் என்றால், அதீதப் பற்று என்ற பொருளில்! காண்க 02/09/2021 (191), 05/06/2022 (464).


அந்தப் பாடலை காமம் என்று பொருள்படும்படி திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார்கள். இது காலப்பிழை!


காதல் உணர்வு தேவையில்லையா என்றால், அது எப்படி? காதல் என்பது ஒரு பிறவிக் குணம். மிகவும் தேவையான ஒன்று.


அந்த உணர்வினால் தான் நாம் மனிதர்களாகவே இருக்கிறோம்!

காதல் உணர்வு என்பது அன்பின் மேல் எழுப்பப்படுவது.


காதல் என்பதற்கும் மோகம், காமம் என்பதற்கும் உள்ள வேறுபாடுகள் அதிகம்.


ஏன் வேறுபாடே அந்த “அதிகம்”தான்! இது நிற்க!


சரி, நாம் அமைச்சு அதிகாரம் தானே பார்த்துக் கொண்டுள்ளோம். இது என்ன நடுவில் ஒரு கதை? என்ற கேள்வி எழலாம்.


குறளையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி?


இப்படி, அப்படி போய் வந்தால்தான் கொஞ்சம் நன்றாக இருக்கும் இல்லையா அதனாலும், அடுத்து வரும் சில குறள்கள் விளங்க இந்தக் கதை துணை புரியும் என்பதாலும் இந்தக் கதை. போதுமா?


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Comments


Post: Blog2_Post
bottom of page