top of page
Search

பெறினென்னாம் பெற்றக்கால் ... 1270, 21/04/2024

21/04/2024 (1142)

அன்பிற்கினியவர்களுக்கு:

அவருடன் கூடி இருந்து குளிர்வேன் என்றாள். அது சரி, எவ்வளவு நேரமாக நான் எதிர் நோக்கியிருக்கிறேன் என்று நேரங்காட்டியைப் பார்க்கிறாள். ஐயகோ, சில மணித்துளிகள் கூட முழுதாகக் கழியவில்லை.

 

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. – 1269; - அவர்வயின் விதும்பல்

 

சேண் சென்றார் வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு = வெகுதூரம் சென்ற என்னவர் இதோ இன்று வெற்றி வாகை சூடி வரப்போகின்றார் என்று வழி மேல் விழி வைத்து என்னைப்போல் ஏங்கிக் கொண்டிருப்பவர்க்கு;  ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் = இந்த ஒரு நாள் ஏழு நாள் போலச் செல்கிறதே!

 

வெகுதூரம் சென்ற என்னவர் இதோ இன்று வெற்றி வாகைசூடி வரப்போகின்றார் என்று வழி மேல் விழி வைத்து என்னைப்போல் ஏங்கிக் கொண்டிருப்பவர்க்கு இந்த ஒரு நாள் ஏழு நாள் போலச் செல்கிறதே!

 

மேலும் தொடர்கிறாள்.

 

நேரம் மிகவும் மெல்ல கரைகிறது. அவரைக் காண வேண்டும் என்ற ஆவலோ புயலாக என்னை அலைக் கழிக்கிறது. அவர் சற்று விரைவாக வந்தால்தான் என்ன?

 

எல்லாவற்றிற்கும் நேரம், காலம் என்ற ஒன்று இருப்பது அவருக்குத் தெரியாதா? ஆறிய கஞ்சி பழம் கஞ்சியாகிவிடும் …

 

“அரும்பசிக்கு உதவா அன்னம் பயனில்லை” என்று விவேக சிந்தாமணியில் உள்ள பாடலை முன்பொருமுறை எனக்குமட்டும் சொன்னாரா என்ன? காண்க 21/04/2022.

 

காலம் தாழ்த்தத் தாழ்த்த, அவர் வந்தால்தான் என்ன? வந்து என்னைத் தழுவினால்தான் என்ன? கூடி முயங்கினால்தான் என்ன?

 

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

உள்ளம் உடைந்துக்கக் கால். – 1270; - அவர்வயின் விதும்பல்

 

பெறின் என்னாம் = அவர் வந்தால்தான் என்ன?; பெற்றக்கால் என்னாம் = வந்து என்னைத் தழுவினால்தான் என்ன?; உறின் என்னாம் = கூடி முயங்கினால்தான் என்ன?; உள்ளம் உடைந்து உக்கக் கால் =என் உள்ளம் உடைந்து சுக்கு நூறாக ஆன பின்!

 

அவன் செய்ய வேண்டியது எல்லாவற்றையும் மிக அழகாகப் பட்டியலிடுகிறாள்.  அவன் சீக்கிரம் வர வேண்டும்; அவளைத் தழுவ வேண்டும்; பின் கூடி முயங்க வேண்டும் … டும்… டும்…

 

இந்தக் குறிப்பைக் கேட்டுக் கொண்டே அவன் நுழைகிறான்.

 

அடுத்த அதிகாரம் குறிப்பு அறிவுறுத்தல், அதனைத் தொடர்ந்து புணர்ச்சி விதும்பல், நெஞ்சொடு புலத்தல். இந்த மூன்று அதிகாரங்களில் உள்ள பாடல்களை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 13/02/202 – 05/03/2022.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




 

Kommentare


Post: Blog2_Post
bottom of page