top of page
Search

புலத்தலிற் ... 1323, 26/06/2024

26/06/2024 (1208)

அன்பிற்கினியவர்களுக்கு:

புத்தேள் நாடு என்றால் புதுமையான உலகம் என்றும் பொருள்படும் என்று முன்னரே பார்த்துள்ளோம். காண்க 30/11/2023.

 

இந்த ஊடல் நிகழும் உலகம் இருக்கிறதே அது ஒரு தனி உலகம். அந்த ஊடலும், … செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சங்கள் தாம் கலந்திருக்கும் பொழுது அது ஒரு தனி சுகம்தான் --- (காண்க 21/03/2022. - பாடல் 40, குறுந்தொகை, செம்புலப் பெயல் நீரார்)

 

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து. – 1323; - ஊடல் உவகை

 

நிலத்தொடு நீர் இயைந்தன்னார் அகத்து = நிலத்திலே நீர் எப்படி இரண்டறக் கலந்து விடுகிறதோ  அது போல அன்பிலே கட்டுண்ட இருவரின் உள்ளத்தில்; புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ = ஊடல் விளையாட்டினால் அவர்களுக்குள்ளே உருவாகும் அந்த அதிசயமான ஓர் உலகத்தைப் போல வேறு உலகம் உண்டோ?

 

நிலத்திலே நீர் எப்படி இரண்டறக் கலந்து விடுகிறதோ  அது போல அன்பிலே கட்டுண்ட இருவரின் உள்ளத்தில், ஊடல் விளையாட்டினால் அவர்களுக்குள்ளே உருவாகும் அந்த அதிசயமான ஓர் உலகத்தைப் போல வேறு உலகம் உண்டோ?

 

அது ஒரு தனி உலகம் தம்பி என்கிறார்.

 

மகாகவி பாரதியார் காற்று என்னும் வசனக் கவிதையை வடித்திருப்பார். அந்தக் கவிதையில் இரு கயிறுகள்தான் காதலர்கள். அவர்களுக்கிடையில் நிகழும் உரையாடல் சுவாரசியமானது. அதிலிருந்து சில வரிகள்.

 

ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல்

தென்னோலை.

 

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச்

சாதாரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங்கீற்றுகளை விரித்திருக்கிறது.

 

ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக்கயிறு

தொங்குகிறது.

 

ஒரு சாண்கயிறு.

 

இந்தக் கயிறு, ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.

பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும்.

கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.

 

இன்று அப்படியில்லை. ‘குஷால்’ வழியிலிருந்தது.

எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள்

அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.

 

“கயிற்றினிடத்தில் பேசினால், அது மறுமொழி சொல்லுமா?”

பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.

 

ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து

வார்த்தை சொல்லவேண்டும். இல்லாவிட்டால்,

முகத்தைத் தூக்கிகொண்டு சும்மா இருந்துவிடும்,

பெண்களைப்போல.

 

எது எப்படியிருந்தாலும், இந்தவீட்டுக் கயிறு பேசும்.

அதில் சந்தேகமே இல்லை.

 

ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு.

ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.

 

ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும், மனைவியும்.

அவை யிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள்

பார்த்துக்கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக்

கொண்டும், வேடிக்கை பேச்சுப் பேசிக்கொண்டும்

ரசப்போக்கிலேயிருந்தன.

 

அத்தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.

ஆண் கயிற்றுக்குக் ‘கந்தன்’ என்று பெயர்.

பெண் கயிற்றுக்குப் பெயர் ‘வள்ளியம்மை’.

(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர்

வைக்கலாம்.)

 

கந்தன் வள்ளியம்மைமீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.

 

“என்ன, கந்தா, சௌக்கியந்தானா? ஒரு வேளை, நான்

சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ?

 

போய், மற்றொருமுறை வரலாமா?” என்று கேட்டேன்.

அதற்குக் கந்தன்: -- “அட போடா, வைதிக மனுஷன்!

உன் முன்னேகூட லஜ்ஜையா? என்னடி, வள்ளி, நமது

சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?”

என்றது.

 

“சரி, சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம்”

என்றது வள்ளியம்மை.

 

அதற்குக் கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டிக்

குதித்து, நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டது.

 

வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று.

ஆனால், மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு

சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே

நமக்கு சந்தோஷந்தானே?

 

இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான், உள்ளதைச் சொல்லிவிடுவதிலே என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப்

பெரியதோர் இன்பமன்றோ? … காற்று - வசனக் கவிதை, மகாகவி பாரதியார்

 

இப்படி இந்தக் கவிதை நீண்டு கொண்டே போகும். படித்துப் பாருங்கள்.

 

இந்தக் காதல் உலகமே ஒரு தனி உலகம். அந்த ஊடல்களைக் கவனிப்பதே தனிச் சுகம். உண்மையைச் சொல்லிவிடுவதில் தவறென்ன? என்கிறார் நம் பேராசான்.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments


Post: Blog2_Post
bottom of page