25/09/2022 (574)
அவளின்பால் ஈர்க்கப்பட்டு அவளின் அழகு அவனை சின்னாபின்னப்படுத்துவதைச் சொல்ல ‘தகை அணங்கு உறுத்தல்’ (109ஆவது) எனும் அதிகாரத்தில் ஆரம்பிக்கிறது காமத்துப் பால்.
அவர்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை இருவரும் குறிப்புகளால் உணர்வதை ‘குறிப்பறிதல்’ (110 ஆவது) அதிகாரம் அமைத்தார்.
“கற்பென்பது களவின் வழித்தே” என்பது பண்டைய சூத்திரம். அதன்படி, இயற்கையின் ஈர்ப்பால், உள்ளத்தால் கலந்து உடலாலும் இணைந்து மகிழ்ந்ததை குறிக்க ‘புணர்ச்சி மகிழ்தல்’ (111 ஆவது) அதிகாரத்தை வைத்தார்.
அவர்களுக்குள் நிகழும் காதல் ஊராருக்கு அரசல் புரசலாக தெரியவருகிறது. முன்பு போல் இருவரும் இயல்பாக சந்திக்க இயலவில்லை. ஊரின் கண்கள் அவர்களை தொடர ஆரம்புத்துவிட்டது. இருவரும் தனித்தனியாக தங்களின் அன்பின் ஆழத்தை, காதலின் சிறப்பைச் சொல்லி ஆற்றுப்படுத்திக் கொள்வதைப் போல இருக்கிறது ‘காதல் சிறப்பு உரைத்தல்’ (112 ஆவது) எனும் அதிகாரம்.
காதல் சிறப்பு உரைத்தலில் முதல் ஐந்து குறள்கள் ‘அவன்’ சொல்வது போலவும். அடுத்த ஐந்து குறள்கள் ‘அவள்’ சொல்வது போலவும், சமமாக சிறப்புகளை எடுத்து வைக்கிறார்கள்.
இந்த அதிகாரத்தின் முதல் இரு குறள்களை வெவ்வேறு தருணங்களில் பார்த்துள்ளோம். காண்க 17/06/2021 (115), 09/03/2021 (51).
மீள்பார்வைக்காக மீண்டும்:
நன்றாக சுண்டக்காய்ச்சியப் பாலில் சிறிது தேன் கலந்து பருகியது போல இருந்ததாம் கொஞ்சு மொழியாளின் வாயில் ஊறிய நீர்!
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.” குறள் 1121 அதிகாரம் - காதற்சிறப்பு உரைத்தல்
பாலொடு = பால்கூட; தேன் = தேன்; கலந்தற்றே = கலந்தாமாதிரி (இருக்காம்); பணிமொழி = மென்மையாய் பேசுகின்ற கொஞ்சு மொழியாளின்; வால் = தூய்மையான; எயிறு = ஈறில், வாயில்; ஊறிய நீர் = சுரந்த நீர்.
அவன்: மேலும் சொல்கிறேன் கேள்.
எங்கள் இருவரிடம் இருக்கும் காதல் என்பது உடலுக்கும் உயிருக்கும் இருக்கும் ஒட்டியத் தொடர்பு போன்றது. அந்த இரண்டு பிரிந்தால்? ஐயகோ, நினைத்துப் பார்க்க முடியாது …
எங்களால் இனி பிரிதல் என்பது நினைத்தும் பார்க்க முடியாத நிகழ்வு என்பதைக் குறிக்க:
“உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.” – குறள் 1122; அதிகாரம் - காதற் சிறப்புரைத்தல்
உடம்போடு உயிர் கொண்டுள்ள தொடர்புகள்/நட்புகள் பல. இரண்டும் சேர்ந்தே இன்பதுன்பங்களை அனுபவிக்கும். இரண்டும் மாறுபடாது சேர்ந்தே இயங்கும். அது போல அவளொடு எங்களுக்குள் அமைந்துவிட்ட நட்பு(கள்).
உடம்பொடு உயிரிடை என்ன அன்ன = உடம்போடு உயிர் கொண்டுள்ள தொடர்புகள்/நட்புகள் பல. இரண்டும் சேர்ந்தே இன்ப துன்பங்களை அனுபவிக்கும். இரண்டும் மாற்படாது சேர்ந்தே இயங்கும். அது போல
மடந்தையொடு எம்மிடை நட்பு = அவளொடு எங்களுக்குள் அமைந்துவிட்ட தொடர்பு(கள்) / நட்பு(கள்).
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments